சபரிமலையில் பக்தர்கள் நெரிசலில் பெரும் துயரம்.. தமிழ்நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமி பத்மாஶ்ரீ மரணம்!
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமி பத்மாஶ்ரீ மரணம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரிமலையில் 14 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருமலை திருப்பதியில் உள்ளது போல வரிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சரங்குத்தி அருகே இருந்தே வரிசைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு பக்தர்கள் எத்தனை மணிநேரத்தில் தரிசனம் செய்ய முடியும் என்பது உள்ளிட்ட அறிவிப்பு பலகைகளுடன் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சபரிமலைக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற குழுவில் இணைந்திருந்த 10 வயது சிறுமி பத்மாஶ்ரீ நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்கு பம்பையில் இருந்து அப்பாச்சி மேடு, சரங்குத்தி வழியாக சில மணிநேரம் மலைப் பாதையில் பாதயாத்திரையாக சென்று ஐயப்பனை வழிபடுவது வழக்கம்.
தமிழக குழுவில் இடம்பெற்றிருந்த பத்மாஶ்ரீ அப்பாச்சி மேடு மலையேறிய நிலையில் மூச்சு திணறலால் அவதிப்பட்டார். அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பத்மாஶ்ரீ உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் சபரிமலை பக்தர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கூறுகையில், பத்மாஶ்ரீக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட உபாதை ஏற்கனவே இருந்தது. ஐயப்பனை தரிசனம் செய்ய அழைத்து வந்தோம். இங்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் பத்மாஶ்ரீ உடல்நலம் பாதிக்கப்பட்டு சபரிமலை புனித தலத்திலேயே மரணம் அடைந்துவிட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications