ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு... கண்காணிப்பு வளையத்தில் 150 இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் உள்ள 150 இந்தியர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான உளவுத்துறை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் 150 பேரில் பெரும்பாலானோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
- இந்த 150 பேரும் இணையம் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் நாள்தோறும் தொடர்பில் இருப்பவர்கள்.
- ஈராக்சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 23 இந்தியர்கள் இணைந்திருந்தனர்.
- இவர்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் மும்பைக்கே திரும்பிவிட்டார்.
- மத்திய கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் இணைய முயற்சித்த 30 இந்தியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
- தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இருக்கும் இந்தியர்களில் 2 பேர் மும்பை புறநகரான கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் ஆஸ்திரேலியா வாழ் காஷ்மீரி, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து தலா ஒருவர், ஓமனைச் சேர்ந்த இந்தியர், சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியர்.
- ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு கொல்லப்பட்ட 6 பேரில் 3 பேர் இந்தியன் முஜாஹிதீன்கள்; மகாராஷ்டிராவில் இருந்து 2 பேர், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.
- ஐக்கிய அரபு அமிரேட்ஸில் இருந்து கடந்த செப்டம்பர் 15-ந் தேதியன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 4 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
- அதேபோல் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட ஆஃப்சா ஜபீன் என்ற நிக்கி ஜோசப் எனும் பெண்ணையும் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
- துருக்கி வழியாக சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய திட்டமிட்டிருந்த சல்மான் முகிதீன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
- இருப்பினும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் குறிப்பிடும்படியான தொடர்புகளை கொண்டிருக்கவில்லை.
- சில இந்திய இளைஞர்களை ஈர்த்து அவர்கள் மூலமாக இந்தியாவில் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மேற்கொண்டு வருகிறது.
- ஆகையால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 150 இந்தியர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications