நாடே அலறுது.. கருகிய 2 முஸ்லிம்கள்! கொலையாளி பஜ்ரங்தள் மோனு யூடியூப் சேனலில் 2லட்சம் சப்ஸ்கிரைபர்கள்
ராஜஸ்தானில் பசுவை கடத்தியதாக கூறி 2 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கைதான பஜ்ரங்தள் மோனுவின் யூடியூப் சேனலுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளார்.
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பசுவை கடத்திச் சென்றதாக கூறி 2 இஸ்லாமிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மோனு மானேசர் தன்னுடைய வன்முறை வீடியோக்கள், வெறுப்பு கருத்துக்களை பேசிய வீடியோக்களை பதிவேற்றிய யூடியூப் சேனலுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாகவே மத ரீதியான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான கும்பல் படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
முக்கியமாக பசுவை காரணம் காட்டி உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள்.

2 இஸ்லாமியர்கள் கொலை
இந்த நிலையில்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறி இருக்கும் இரட்டை படுகொலைகள் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜுனைத் மற்றும் நசீர். இந்த 2 இளைஞர்களையும் காணவில்லை என்றும் அவர்களை பசுவை கடத்தியதாக கூறி பஜ்ரங்தள் அமைப்பினர் கடத்தி சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார்கள்.

எரிந்த கார்
ஆனால், அந்த புகாரை போலீசார் ஏற்று வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காணாமல் போன 2 பேரையும் உறவினர்களும், அப்பகுதி மக்களும் தேடி இருக்கிறார்கள். இந்த நிலையில் அரியானா மாநிலம் பிவானியில் எரிந்த நிலையில் கார் ஒன்று மர்மமான முறையில் கிடந்து இருக்கிறது.

கருகிய உடல்கள்
அந்த காரில் அடையாளம் தெரியாத 2 உடல்கள் கருகிய நிலையில் இருந்து உள்ளன. அவர்கள் யார் என்று விசாரித்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் பஜ்ரங்தள் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்டார் என்று புகாரளிக்கப்பட்ட ஜுனைத் மற்றும் நசீர் ஆகியோர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

போலீசாருடன் பஜ்ரங்தள்
கொல்லப்பட்ட ஜுனைத்தும் நசீரும் சிக்ரியில் உள்ள தங்களின் உறவினர் வீட்டுக்கு சென்றபோது ஹரியானா மாநில காவல்துறை மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் அவர்களை தடுத்து நிறுத்தியதாக அவர்களின் உறவினர் முஹம்மது ஜாபிர் தெரிவித்து இருக்கிறார். போலீசாரும் பஜ்ரங்தள் அமைப்பினரும் அவர்களை கொடூரமாக தாக்கியதாக கூறினார்.

5 பேர் கைது
குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மோனு மானேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து உள்ளார்கள். அவர்களை தொடர்ந்து டாக்சி ஓட்டுநர் ரிங்கு சைனியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

அதிர்ச்சி தகவல்
இதற்கிடையே பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மோனு மானேஷத் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. ராஜஸ்தானில் பசு பாதுகாப்பு அமைப்பு ஒன்றை நடத்தி வரும் மோனு இதே போல் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளார்கள்.

யூடியூப் சேனல்
மோனு தனியார் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தனது சமூக வலைதளங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் இருக்கும் படங்களை பகிர்ந்து உள்ளார். அவரது பேஸ்புக் பக்கத்தை 83 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். அவரது யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

பதைபதைக்கும் வீடியோக்கள்
அதில், பசுவை கடத்திச் செல்பவர்களை பிடிப்பது, அவர்களை தாக்குவது போன்ற பல்வேறு பதைபதைக்க வைக்கும் வன்முறை வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்கள். அதில் பெரும்பாலான வீடியோக்கள் நேரடி ஒளிபரப்பாகவே உள்ளன. அதை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு கருத்து தெரிவித்து உள்ளார்கள்.
|
2 லட்சம் சப்ஸ்கிரைபர்கள்
இதன் மூலம் 2 லட்சத்துக்கு 5 ஆயிரம் பேர் அவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து உள்ளார்கள். இதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யூடியூப் அவரை பாராட்டி சில்வர் பட்டன் விருதை வழங்கி உள்ளது. பாலிடெக்னிக் படித்து இருக்கும் அவர் தன்னுடைய 2 வது ஆண்டு கல்லூரி படிப்பின்போதே பஜ்ரங்தள் அமைப்பில் சேர்ந்து உள்ளார். துப்பாக்கிகளுடன் அவர் காரில் சென்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications