20 தமிழர் படுகொலை.. ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு
ஹைதராபாத்: ஆந்திர வனப் பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாகக் கூறி 20 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை சுட்டுக் கொன்றது அம்மாநில சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எஃப்.)

இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது ஹைதராபாத் உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர அரசின் சார்பில் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (ஏ.ஏ.ஜி.) டி. ஸ்ரீநிவாஸ் ஆஜராகி வாதாடினார்.
அவர் கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக 302 (கொலை), 364 (கடத்தல் அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 34 (பொதுவான உள்நோக்கத்துடன் பல்வேறு நபர்கள் கூட்டாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், ஆந்திர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெயர்கள் குறிப்பிடப்படாத, ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை ஆந்திர போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான நடவடிக்கையிலும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது," என்றார் அவர்.












Click it and Unblock the Notifications