2016ம் ஆண்டும் "படுதோல்வி காலம்தான்".... கதிகலங்கிக் கிடக்கும் பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று பிரமாண்டமாக மத்தியில் ஆட்சி அமைத்த பாரதிய ஜனதாவுக்கு டெல்லி சட்டசபை தேர்தலில் தொடங்கிய சரிவு பீகாரைத் தொடர்ந்து 2016ம் ஆண்டிலும் தொடரும் நிலைதான் உள்ளது.

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 336 இடங்களை இந்த கூட்டணி அள்ளியது. இதில் பா.ஜ.க. மட்டும் 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக மோடி அலை என கூறப்பட்டது.

2014ல் பெரு உற்சாகம்

2014ல் பெரு உற்சாகம்

மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா 122 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்தது. அதேபோல் ஹரியானாவிலும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை கட்சியாக வென்று ஆட்சியை அமைத்தது.

ஜம்மு காஷ்மீரில் 25 இடங்களைக் கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாக விஸ்வரூபமெடுத்த கையோடு முதல் முறையாக ஆட்சியிலும் பங்கேற்றது. அதன் பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 37 இடங்களைக் கைப்பற்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் ஆட்சியை அமைத்தது. இப்படி பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் 2015ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல் பலத்த மரண அடியை அக்கட்சிக்கு கொடுத்தது.

2015-ல் மரண அடி

2015-ல் மரண அடி

டெல்லியில் எப்படியும் 'மோடி அலை'யால் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என கனவில் மிதந்தது பா.ஜ.க. ஆனால் அங்கு அரவிந்த் கேஜ்ரிவால் சுனாமி வீசியது. இந்த சுனாமியில் பா.ஜ.க. வெறும் 3 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு கிடைத்த பயங்கர மரண அடி.

இதனைத் தொடர்ந்து அண்மையில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எப்படியாவது பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என கங்கணத்துடன் அத்தனை விதமான வியூகங்களையும் வகுத்து அதுவும் அமித்ஷா பீகாரிலேயே மாதக் கணக்கில் முகாமிட்டு தேர்தல் வேலை பார்த்தார்.. ஆனால் இங்கு 2வது மரண அடி விழுந்தது பா.ஜ.க.வுக்கு. வெறும் 53 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இந்த மாநிலத்தில் நிதிஷ்குமார் அலை அடித்தது.

2016-ல் மீண்டும் மரண அடி

2016-ல் மீண்டும் மரண அடி

இந்த ஆண்டைப் போலத்தான் 2016ம் ஆண்டும் பாரதிய ஜனதாவுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கப் போவதில்லை. அடுத்த ஆண்டு அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்க மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அஸ்ஸாமைப் பொறுத்தவரையில் பா.ஜ.க. பலவீனமாகத்தான் இருக்கிறது. ஆகையால் ஆளும் காங்கிரஸ், அஸ்ஸாம் கண பரிஷத் கட்சிகளை உடைத்து தம்மை வலுவாக்கிக் கொண்டு வருகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் 9 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. இழுத்தது. இப்படி இழுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் நிலையில் அக்கட்சி இருக்கிறது. அதேபோல் அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியின் தலைவர்களையும் பா.ஜ.க. இழுத்துள்ளது.

அஸ்ஸாம்

அஸ்ஸாம்

இந்நிலையில் பீகார் தேர்தலைத் தொடர்ந்து முதலமைச்சரான காங்கிரஸ் கட்சியின் தருண் கோகய், பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், அஸ்ஸாம் கண பரிஷத், ஏ.ஐ.யு.டி.எப், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை ஓரணியில் ஒன்று திரளவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதில் குறைந்த பட்சம் காங்கிரஸ், அஸ்ஸாம் கண பரிஷத், ஏ.ஐ.யு.டி.எப். ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தாலே பீகாரில் லாலு- நிதிஷ் கூட்டணியைப் போல பா.ஜ.க.வுக்கு கடும் சவாலை அளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த மாநிலத்தில் அவ்வளவு எளிதாக பா.ஜ.க. வென்றுவிட முடியாது.

மே. வங்கம்

மே. வங்கம்

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் பா.ஜ.க.வின் போராட்டமே 3-வது இடத்துக்கானதுதான். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளிடையே தான் பிரதான போட்டி என்பதால் இம்மாநிலத்தில் பா.ஜ.க. பெரிதாக எதையும் எதிர்பார்த்துவிட முடியாது.

கேரளா

கேரளா

கேரளாவிலும் 3-வது இடத்துக்கான அடித்தளத்தைத்தான் பா.ஜ.க. அமைக்க முடியும். இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடதுசாரிகள் அணிக்கும் இடையேதான் பிரதான போட்டி. அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் கணிசமான வார்டுகளைக் கைப்பற்றியதைத் தவிர பா.ஜ.கவால் சாதிக்க முடியவில்லை.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்திலோ தனிப்பட்ட முறையில் வெறும் 3% வாக்குகளுடன் இருக்கும் பா.ஜ.கவைப் பொறுத்தவரையில் இந்த வாக்கு சதவீதத்தைத் தக்க வைப்பது அல்லது உயர்த்துவது என்ற வியூகத்துடன் கூட்டணிக்குத்தான் போராடுமே தவிர மற்றபடி பிரதான போட்டியாளர்கள் பட்டியலில் அக்கட்சி இல்லை என்பதே யதார்த்தம்..

புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரியிலும் ஆளும் என். ஆர். காங்கிரஸ், அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ம.க. ஆகிய 4 கட்சிகளில் ஒன்றுடன் இணைந்தால்தான் பா.ஜ.க. முகமே காட்ட முடியும்..

இப்படி 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு அடுத்தடுத்து தோல்வியைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

2017-ல் மூச்சுவிடலாம்

2017-ல் மூச்சுவிடலாம்

2015, 2016ஆம் ஆண்டுகளில் மாநில சட்டசபை தேர்தல்களில் மரண அடியை அடுத்தடுத்து வாங்கிய பா.ஜ.க.வால் 2017ம் ஆண்டுதான் மூச்சுவிடவே முடியும். கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்கள் 2017ம் ஆண்டு நடைபெற உள்ளன. இதில் கோவா, உத்தரகாண்ட் மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு ஆறுதலை அளிக்கலாம்.. பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கடுமையான போராட்டத்தைத்தான் சந்திக்க நேரிடும்.

மோடிக்கு எதிராக...

மோடிக்கு எதிராக...

மாநில சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவும் பா.ஜ.கவால் ராஜ்யசபாவிலும் பெரும்பான்மையை நோக்கி முன்னேறவே முடியாத நிலைமையே நீடிக்கப் போகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை ஆட்டம் காண்பதும் உறுதி... இது பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே பிரதமர் மோடிக்கு எதிராக தற்போதைவிட மிகப் பெரிய கலகக் குரலாக வெடிக்கவும் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+