வன்முறையான இளைஞர்கள் போராட்டம்.. லடாக்கில் 4 பேர் பலி - ஊரடங்கும்.. மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு
லடாக்: அரசியலமைப்பு அட்டவணை 6ன்படி லடாக்கை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் போலீஸ் வாகனம், பாஜக அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வன்முறையையொட்டி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வன்முறையில் தற்போது வரை 4 பேர் பலியான நிலையில் 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமும் புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்தது. அதன்பிறகு இரு யூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநர் மேற்பார்வையில் செயல்பட்டு வந்தது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக்கை மாநிலமாக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. லடாக் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 6ம் தேதி மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் வடகிழக்கு மாநிலங்களை போல் லடாக்கை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 6வது அட்டவணையின் கீழ் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று லடாக்கில் உள்ளவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 10ம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட 15 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் 2 பேர் மயங்கினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த போராட்டம் வலுவானது. அதாவது Leh Apex Body இளைஞர் பிரிவை சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இன்று முழு அடைப்பு போராட்டம் லடாக்கில் தொடங்கியது. ஏராளமான இளைஞர்கள் சாலைகளில் களமிறங்கி போராட்டத்தை தொடங்கினர். லடாக்கை அரசியலமைப்பு அட்டவணை 6ன்படி தனி மாநிலமாக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
#WATCH | Leh, Ladakh: Security heightened in Leh amid a protest by the people of Ladakh demanding statehood and the inclusion of Ladakh under the Sixth Schedule pic.twitter.com/dBIYbVPMwo
— ANI (@ANI) September 24, 2025
போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டம் மாற்றுபாதையில் சென்று வன்முறையானது. போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்கள், லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு தீவைத்து எரித்தனர். பதற்றம் ஏற்பட்டதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
இந்த வன்முறையில் மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். இதனை லே அபெக்ஸ் பாடி உறுதி செய்துள்ளது. மேலும் 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் உண்ணாவிரதம் இருந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இளைஞர்களை அமைதி காக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
லடாக்கில் நிலைமை எல்லை மீறி சென்றுள்ளதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் நடக்கும் லடாக் திருவிழா பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் அங்குள்ள நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications