மணிப்பூரில் திக் திக்.. பத்திக்கிட்டு எரியும் நகரங்கள்! 5 இளைஞர்கள் கைதை கண்டித்து முழு அடைப்பு
இம்பால்: ஆயுதங்களை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மணிப்பூரில் நடைபெறும் 48 மணி நேர முழு அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிரான மெய்தி சமூகத்தினரின் தாக்குதல்களால் அம்மாநிலமே கலவர பூமியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மெய்தி சமூகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உருவத்தை மறைக்கும் சீருடைகள் வைத்திருந்ததாகக் கூறி முன்னதாக, மணிப்பூர் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மணிப்பூரில் மெய்தி பிரிவினரின் மீரா பைபி என்ற அமைப்பு ஐந்து இளைஞர்களை விடுவிக்கக் கோரி திங்கள்கிழமை இம்பால் கிழக்கு மாட்டத்தின் ஹுரை மற்றும் கோங்பா, பிஷ்னுபூர் மாவட்டத்தின் நம்போல், மேற்கு மாவட்டத்தின் காக்வா, தவுபால் மாவட்டத்தின் சில பகுதிகளின் முக்கிய சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்தினர்.
ஐந்து உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட 48 மணிநேர முழு அடைப்பு போராட்டம் காரணமாக அம்மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டத்தில் ஆயுதம் தாங்கி இருந்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் விடுவிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சந்தைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. சில வாகனங்களே சாலைகளில் ஓடின. பந்த் காரணமாக மணிப்பூர் பள்ளிக் கல்வித்துறை செவ்வாய் மற்றும் புதன் கிழமை நடத்த திட்டமிட்டிருந்த 10 ஆம் வகுப்புக்கான அனைத்து துணைத்தேர்வுகளையும் ரத்து செய்து உள்ளது. இளைஞர்களின் கைது குறித்து, அனைத்து லாங்தபால் கேந்திர குழுவின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் யும்நம் ஹிட்லர் கருத்து தெரிவித்துள்ளார்,
"கைது செய்யப்பட்டுள்ள ஐந்து இளைஞர்களும் சாதாரண மக்கள். பாதுகாப்புப் படையினர் தங்களின் கடமையைச் சரிவர செய்யத் தவறிவிட்டனர். அதன் காரணமாகவே குகி ஸோ போராட்டக்கார்களிடமிருந்து தங்கள் கிராமங்களைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்து வந்தார்கள். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். விடுதலைச் செய்யாவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரமடையும்" என்று தெரிவித்தார்.
5 பேர் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போரோம்பட் காவல் நிலையத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனைத் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினார்கள். இந்த தாக்குதலில் அசாம் ரைபில் ஃபோர்ஸ் வீரர்கள், போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications