விவகாரத்து செய்வதில் கேரளா நம்பர் 1... ஒரு மணிநேரத்தில் 5 "டைவர்ஸ்" கேஸ் பதிவாகிறதாம்!
சென்னை: நாட்டிலேயே, விவாகரத்து வழக்குகளில் கேரளா முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றங்கள், கொலைகள், விபத்துக்கள் ஆகியவற்றிற்கு எடுக்கப்படுவதை போல் நாடு முழுவதும் நடக்கும் விவகாரத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை 2015ம் ஆண்டு மார்ச் மாதம் லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்குகளின் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் 2014ம் ஆண்டு மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் கையாளப்பட்டுள்ளது.

விவாகரத்து வழக்குகள்
விவகாரத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. 2014 ம் ஆண்டின் கணக்கின் படி மிக அதிகபட்சமாக கேரளாவில் ஒரு மணிநேரத்திற்கு 5 விவகாரத்துக்களும், நாள் ஒன்றிற்கு 130 விவாகரத்துக்களும் வழங்கப்படுகின்றன.

2015ல் அதிகரிப்பு
படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவில்தான் விவாகரத்துகளும் அதிகரிக்கிறது. 2015ம் ஆண்டு கேரளாவில் 52,541 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ளதாகவும் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

பத்தாண்டுகளில் அதிகரிப்பு
கேரள மாநிலத்தில் உள்ள கடந்த பத்தாண்டுகளாகவே விவாகரத்து கோரி, அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தெரிந்துள்ளது. 2005 - 06ம் ஆண்டில் 8,456 வழக்குகளும், 2006 - 07ம் ஆண்டில் 9,775 வழக்குகளும், 2007 - 08ம் ஆண்டில் 9,937 வழக்குகளும், 2008 - 09ம் ஆண்டில் 11,194 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு
2009 -10ம் ஆண்டில், மொத்தம் 11,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது படிப்படியாக அதிகரித்து 2014ம் ஆண்டு 47,525 வழக்குகளும், 2015ம் ஆண்டு 52,541 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த 5 ஆண்குளில் மட்டும் விவகாரத்து வழக்குகள் கேரளா மாநிலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

குடிப்பழக்கம்
கேரள மாநிலத்தில், விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க காரணம் ஆண்களிடையே உள்ள குடிப்பழக்கம், குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. இதனால், பெண்கள் விவாகரத்து கோரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கேரள மாநிலத்தில், ஆண்கள் அதிக அளவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

மணமுறிவுக்கு காரணம்
மணமுறிவுக்கு வேறு காரணங்களும் உள்ளன. பக்குவமில்லாத வயதில் ஆண், பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, சமூக மாற்றங்கள், தவறான தொடர்புகள், ஒழுக்கமின்மை, அழகு பற்றிய மதிப்பீடுகள், சந்தேக எண்ணங்கள், வரதட்சணைக் கொடுமைகள் உள்ளிட்டவையும் காரணமாக அமைகின்றன. பெரும்பாலான விவாகரத்து வழக்குகள், கணவன், மனைவி இடையிலான கருத்து வேறுபாடு, வன்முறைச் சம்பவங்களால் நிகழ்வதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடுமுழுவதுவம் விவாகரத்து
நாடு முழுவதும் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், விவாகரத்து வழக்குகள் அதிகரித்து காணப்படுகின்றன. விவாகரத்தில் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4வது இடத்திலும், ஹரியானா 5வது இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிராவில் 2014-15ம் ஆண்டுகளில் 31,075 வழக்குகளும், கர்நாடகாவில் 23, 285 விவாகரத்து வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

குடும்ப வன்முறை
விவகாரத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கணவரால் துன்புறுத்தப்படுவதே அதிக விவாகரத்து வழங்கப்படுவதற்கான காரணமாக உள்ளது. இந்தியாவில் 10 ல் 6 ஆண்கள் தங்களின் மனைவியை அடிக்கும் வழக்கம் கொண்டவர்கள் என 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடித்தனம் அதிகரிப்பதும் விவாகரத்து அதிகரிக்க காரணமாகிறது.












Click it and Unblock the Notifications