பொம்மைக்கடை எஸ்கலேட்டரில் சிக்கி விரலின் முன்பகுதியை இழந்த 5 வயது சிறுமி
மும்பை: மும்பையில், பொம்மை கடைக்குத் தந்தையுடன் சென்ற 5 வயது சிறுமி தனியாக எஸ்கலேட்டரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தனது வலது கை விரல்கள் மூன்றில் பலத்த காயமடைந்துள்ளாள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொம்மைக்கடை மீது சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அனைஷா மொஹத்தா என்ற 5 வயது சிறுமி தனது தந்தையான ஆசிஷ் உடன் மும்பையில் உள்ள குர்லா'ஸ் போனிக்ஸ் மாலில் உள்ள பொம்மை கடை ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த எக்ஸலேட்டரில் சிறுமி தனியாக பயணம் செய்ததாக தெரிகிறது. எக்ஸலேட்டர் மாடியைச் சென்றடையும் முன்னர் சிறுமி தவறுதலாக கீழே அமர்ந்ததாகவும், அப்போது அவளது வலது கை எக்ஸலேட்டருக்குள் மாட்டிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதில், அச்சிறுமியின் மூன்று விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவளை ஆசிஷ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போதும் அவளது மோதிர விரல் முன்பகுதி டாக்டர்களால் அகற்றப்பட்டுள்ளதாகவும், மற்ற இரண்டு விரல்கள் செயலாற்றும் திறனை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த எக்ஸலேட்டர் விபத்துக்கு பொம்மைக் கடை நிர்வாகமே பொறுப்பு எனவும், சிறுவர்கள் வந்து போகும் இடங்களில் இது போன்று பொறுப்பற்று எக்ஸலேட்டரில் பாதுகாப்புக்கு ஆட்கள் நியமிக்காதது குற்றம் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார் ஆசிஷ்.
ஆனால், ஆஷிசின் புகாரை பொம்மைக்கடை நிர்வாகம் மறுத்துள்ளது. தாங்கள் உரிய பாதுகாப்போடு, தக்க மருத்துவ உதவியும் அளித்ததாக விளக்கம் அளித்துள்ளது பொம்மைக்கடை நிர்வாகம்.
ஆஷின் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், யார் மீது குற்றம் என்பது விசாரணை முழுவதுமாக முடிவடைந்த பின்னரே தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications