மிசோரம்: 5,000 பொதுமக்களுடன் இந்தியாவிடம் 39 மியான்மர் ராணுவ வீரர்கள் சரண்-திருப்பி அனுப்பப்பட்டனர்!
ஐஸ்வால்: மியான்மர் எல்லையில் கொரில்லா படையினர் அந்நாட்டு ராணுவ முகாம்களை கைப்பற்றியதால் 5,000 பொதுமக்களுடன் 39 மியான்மர் ராணுவத்தினர் இந்தியாவுக்குள் நுழைந்து சரணடைந்தனர். பின்னர் 39 ராணுவ வீரர்களும் பாதுகாப்பாக மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஆயுத குழுக்கள் போராடி வருகின்றன. இந்தியா- மியான்மர் எல்லையில் கொரில்லா படை குழுக்கள், ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மியான்மர்- இந்தியா எல்லை பகுதியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் கொரில்லா படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது கொரில்லா படையினர் முகாம்கள் மீது மியான்மர் விமானப் படை தாக்குதல்களை நடத்தியது. இதனால் மியான்மர் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் மிசோரம் மாநிலத்துக்குள் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இதனிடையே மியான்மர் எல்லை ராணுவ முகாம்களையும் கொரில்லா படையினர் கைப்பற்றினர். இதனால் அப்பகுதியில் இருந்து 5000 பொதுமக்களுடன் 39 ராணுவ வீரர்கள் சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தனர். பின்னர் 39 ராணுவ வீரர்களுடம் முறைப்படி மிசோரம் போலீசிடம் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் மத்திய அரசின் உத்தரவுப்படி அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் நமது நாட்டு விமானப் படையினர் 39 ராணுவ வீரர்களையும் மியான்மர் ராணுவத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்த 39 ராணுவ வீரர்களும் மணிப்பூரின் மோரே நகர் எல்லையில் மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மிசோரம் மாநில மக்களும் மியான்மர் மிசோ மக்களும் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். மியான்மர் மக்களை அகதிகளாக இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால் இதனை எதிர்த்து தொப்புள் கொடி உறவுகளான மிசோ மக்களுக்கு மிசோரம் மாநில அரசு அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதேபோல மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுவினரால் பாதிக்கப்பட்ட குக்கி இனமக்களும் மிசோ பழங்குடிகளுடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள்.
மிசோரம் மாநிலத்தில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. இந்த தேர்தலில் மணிப்பூரில் குக்கி இனமக்கள் மீதான தாக்குதல்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு தடுக்கவில்லை என்கிற அதிருப்தி மையமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
