கொடுமையை பாருங்க.. நீச்சல் வேற தெரியுமாம்.. நடுக்குளத்தில் நண்பர்கள் போட்ட "யூடர்ன்".. அலறிய நெல்லூர்
படகு ஒன்று திடீரென குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்
அமராவதி: குளத்தில் படகு கவிழ்ந்ததில் இளைஞர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லூர் மாவட்டம் தோடேரு கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குளத்தில் மீன் பிடிப்பதற்காக திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதற்கு அனுமதி கிடையாது, இருப்பினும் வழக்கமாக இந்த இளைஞர்கள் குளத்தின் பராமரிப்பாளரை ஏமாற்றி அவருக்கு தெரியாமல் படகு ஒன்றை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்க சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில், நேற்றும் இதேபோல முயன்றிருக்கிறார்கள். முதல்கட்டமாக குளம் இருக்கும் பகுதிக்குள் ஊடுருவியுள்ளார்கள். பின்னர் இருவர் மட்டும் சென்று பராமரிப்பாளருக்கு தெரியாமல் அங்கிருந்து படகை எடுத்துக்கொண்டு வந்துள்ளனர். இது மீன்களுக்கு உணவளிப்பதற்காக பயன்படும் சிறிய வகை நாட்டு படகாகும். அதிகபட்சமாக இதில் 2-3 ஆட்கள் வரை செல்லலாம். ஆனால் இதில் இளைஞர்கள் சுமார் 10 பேர் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

யு-டர்ன்
தொடக்கம் எல்லாம் சிறப்பாகதான் இருந்திருக்கிறது. இளைஞர்கள் பாட்டுப்பாடிக்கொண்டும், விசிலடித்துக்கொண்டும் மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றனர். இந்த நாட்டு படகில் இன்ஜின் கிடையாது. துடுப்புகளை கொண்டுதான் இயக்க வேண்டும். குளம் மிகப்பெரியது. முழுவதுமாக சுற்றி வர நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் இளைஞர்கள் பாதியிலேயே யு-டர்ன் அடிக்க யோசித்துள்ளனர். ஆனால் முடியவில்லை. எனவே கரையோரமாக சென்று யு-டர்ன் எடுத்துள்ளனர். இப்படி எடுக்கும் போது படகு அடியிலிருந்த சகதியில் சிக்கியிருக்கிறது.

விபத்து
எவ்வளவு முயற்சித்தும் படகை திருப்ப முடியவில்லை. எனவே துடுப்புகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து படகை திருப்பியுள்ளனர். இதில் சமநிலையை இழந்த படகு கவிழும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இதிலிருந்து தப்பிக்க நினைத்த இளைஞர்கள் தண்ணீரில் குதித்துள்ளனர். ஆனால் அவர்கள் வெளியே வரவில்லை. தண்ணீரில் குதிக்காமல் இருந்த நான்கு பேர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளனர். ஆனால் ஆட்கள் வருவதற்குள் தண்ணீரில் மூழ்கியவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 6 இளைஞர்களையும் சடலமாக மீட்டுள்ளனர்.

காரணம்
இது குறித்து நெல்லூர் காவல் கண்காணிப்பாளர் விஜயராவ் கூறியதாவது, "இளைஞர்கள் வழக்கமாக இந்த குளத்தில் படகு சவாரி செய்பவர்கள்தான். அதே பழக்கத்தில் இம்முறையும் படகை எடுத்தக்கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் படகு கவிழ்ந்த நிலையில், தண்ணீரில் குதித்த 6 பேரும் நீருக்கடியில் இருந்த சகதியில் சிக்கியுள்ளனர். அங்கிருந்து வெளிவர முடியாமல் தவித்த அவர்கள் உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளனர். ஆனால் உடனடியாக யாரும் வராததால் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீச்சல் தெரிந்தும்
இதில் சோகம் என்னவெனில் இவர்கள் 6 பேருக்குமே நன்றாக நீச்சல் தெரிந்திருக்கிறது. இருந்தும் சகதியில் சிக்கியதால் அசைய முடியாமல் உயிரிழந்துள்ளனர்" என்று கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குளத்தின் பாதுகாவலர் மற்றும் உயிர்பிழைத்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications