பெங்களூரில் 8 வயது சிறுமி பலாத்காரம்: 63வயது ஆசிரியர், பள்ளி முதல்வர் கைது
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பள்ளி வளாகத்தில் 8 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக 63வயது கவுரவ ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பணிக்கு சேர்த்த குற்றத்துக்காக பள்ளி முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் கடந்த மாத துவக்கத்தில், மாரத்தஹள்ளி பகுதியிலுள்ள பள்ளியொன்றில் 6 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஸ்கேட்டிங் பயிற்றுநர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மேலும் 2 உடற்பயிற்சி ஆசிரியர்களும் கைதானார்கள். இந்த சம்பவத்தையடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற அரசு உத்தரவிட்டது.

பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக பெங்களூரில் கடந்த மாதம் 31ம்தேதி பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அதேபோன்ற பலாத்கார சம்பவம் பெங்களூரின் தலகாட்புரா காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது. இப்பகுதியின் கனகபுரா ரோடு, குப்பலால் கேட் பகுதியிலுள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் 8 வயது மாணவி ஆசிரியரால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று 63 வயது ஆசிரியர் சந்திரமவுலி கைது செய்யப்பட்டார். விசாரணையில், சிறுமியின் ஆடை களைந்து தொல்லை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
சந்திரமவுலி, ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர். இந்த பள்ளியின் முதல்வர் லட்சுமிகாந்த்துக்கு அவர் நண்பர். எனவே ஓய்வு காலத்தில் வீட்டில் ஏன் சும்மா இருக்க வேண்டும், எனது பள்ளியில் வேலை பார்க்கலாமே என்று சந்திரமவுலியை கவுரவ ஆசிரியராக அழைத்து வந்துள்ளார் லட்சுமிகாந்த்.
சம்பவம் நடந்த பள்ளி பெரும் புகழ் பெற்ற பள்ளி கிடையாது. நடுத்தர வர்க்கத்தார் படிக்கும் சிறிய பள்ளிதான். எனவே இவரை வேலைக்கு சேர்த்தாலும் யாரும் எதுவும் சந்தேகிக்மாட்டார்கள் என்று லட்சுமிகாந்த் நினைத்துள்ளார். ஆனால், சம்பவம் குறித்து அறிந்திருந்தும் காவல்துறைக்கு தகவல் அளிக்காத குற்றத்திற்காக லட்சுமிகாந்த்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications