ஹரியானா: ராகுல் காந்தியின் கூட்டணி முயற்சி வீண்..ஆம் ஆத்மி தனித்துப் போட்டி- வேட்பாளர்கள் அறிவிப்பு!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியுடனான காங்கிரஸின் கூட்டணி முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி 20 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக கூட்டணி குறித்த முடிவை டெல்லி மேலிடம் தெரிவிக்காவிட்டால் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என ஹரியானா ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.
ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 12.

ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இதனால் ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி. அதேநேரத்தில் ஹரியானாவில் தங்களது கட்சி வலிமையான கட்டமைப்பைக் கொண்டிருப்பதாக கூறி வருகிறது ஆம் ஆத்மி. இதனால் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கூட்டணி குறித்த முடிவை டெல்லி மேலிடம் அறிவிக்காவிட்டால் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்போம் என ஹரியானா மாநில ஆம் ஆத்மி அறிவித்தது. இது காங்கிரஸுக்கான கெடுவாகவும் பார்க்கப்பட்டது.

ஆனாலும் எந்த ஒரு சமிக்ஞையும் டெல்லியில் இருந்து வராத நிலையில் தற்போது முதல் கட்டமாக 20 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதனால் ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே களம் காண முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.
ஹரியானா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் வெல்லும்; ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு சில இடங்களே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications