‛என் ஆரூயிர் நண்பர்’.. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்! உற்சாக வரவேற்பு
அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று விழா மேடையில் முன்வரிசையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, பாலய்யா, அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் உள்பட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது.

அதாவது சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து களமிறங்கியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.
ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராக இன்று பதவியேற்றார். இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் மூலம் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார்.. ஏற்கனவே 3 முறை முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவியேற்றார்.
இந்த விழாவில் சந்திரபாபு நாயுடுவுடன் அமைச்சர்கள் பதவியேற்றனர். தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்பட பலர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதில் பவன் கல்யாணுக்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் நடிகர் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். நடிகர் ரஜினிகாந்தும், சந்திரபாபு நாயுடுவும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் தான் ஆந்திரா சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கம் மூலமாகவும், பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தான் ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் அவர் வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர். இருவருக்கும் விழா மேடையில் முதல் வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. முன்னதாக விழா மேடைக்கு வந்த ரஜினிகாந்த் பார்த்து அங்கிருந்தவர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். அவர்களை பார்த்து ரஜினிகாந்த் சிரித்தபடி கையசைத்து மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார்.
மேலும் இந்த விழாவில் மேலும் பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், மோகன் பாபு, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் உள்பட பலர் பங்கேற்றனர். இவர்கள் தவிர பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications