மகளுக்காக பிரச்சாரம் செய்த நடிகை கிரணின் 101 வயது தந்தை
சண்டிகர்: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தனது மகளும், நடிகையுமான கிரண் கேருக்கு ஆதரவாக 101 வயதாகும் கர்னல் தாக்கர் சிங் இன்று சண்டிகரில் பிரச்சாரம் செய்தார்.

பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் மனைவியும் நடிகையுமான கிரண் கேர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் சண்டிகரில் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் சண்டிகரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். சாதாரண உடையில் மேக்கப் இல்லாமல் வந்து பிரச்சாரம் செய்வது, பொது மக்களிடம் பஞ்சாபி மொழியில் பேசி அசத்துவது என்று வாக்கு சேகரிக்கிறார் கிரண்.
இந்நிலையில் கிரணுக்கு ஆதரவாக அவரது 101 வயது தந்தை கர்னல் தாக்கர் சிங் இன்று சண்டிகரில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக துபாயில் வெல்கம் பேக் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அனில் கபூர் அங்கிருந்து சண்டிகர் வந்து கிரணுக்கு வாக்கு சேகரித்து விட்டு அன்றிரவே கிளம்பிச் சென்றார்.
மேலும் அனுபம் கேரும் தனது மனைவிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். இதே சண்டிகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்தி நடிகை குல் பனாக் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
