அசத்தல் வேகத்தில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்.. ஒரே காலாண்டில் ரூ. 644 கோடி நிகர லாபம்!
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் ரூ. 644 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 28% அதிகமாகும். இந்தச் சாதனை, நிறுவனத்தின் பங்குகளை கிட்டத்தட்ட 11% உயரச் செய்துள்ளது.
மின்சார விநியோகத்தின் மூலம் கிடைத்த வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் 30, 2025 அன்று வெளியான தகவலின்படி, பங்குச் சந்தையில் அதானி கிரீன் எனர்ஜி (AGEL) பங்குகள் 10.80% உயர்ந்து ஒரு பங்கு ரூ. 1,113.05 ஆக வர்த்தகமானது.
நாள் முழுவதும், இந்த பங்குகள் அதிகபட்சமாக 13.98% உயர்ந்து ரூ. 1,145-ஐ தொட்டன. தேசிய பங்குச் சந்தையில் (NSE) ஒரு பங்கு ரூ. 1,112.60 ஆக உயர்ந்து, 10.79% வளர்ச்சி கண்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்தின் வளர்ச்சி இந்த லாப உயர்விற்கு முக்கிய காரணமாகும்.

கடந்த 2024-25 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 515 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மின்சார விநியோக வருவாய் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 2,308 கோடியாக இருந்த நிலையில், நடப்பு காலாண்டில் ரூ. 2,776 கோடியாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ. 3,396 கோடியிலிருந்து ரூ. 3,249 கோடியாக குறைந்துள்ளது. மொத்த செலவுகள் ரூ. 2,857 கோடியிலிருந்து ரூ. 2,874 கோடியாக சற்று அதிகரித்துள்ளன.
அதானி கிரீன் எனர்ஜியின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் கண்ணா ஒரு அறிக்கையில், "குஜராத்தில் காவ்டாவில் 30 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஆலையை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. செயல்பாட்டுத் திறன், திட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த புதுமையான தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அதானி குழுமத்தின் பெரும்பாலான மற்ற நிறுவனப் பங்குகளும் உயர்வுடன் முடிவடைந்தன. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 5.05%, என்டிடிவி 3.26%, அம்புஜா சிமெண்ட்ஸ் 2.95%, அதானி போர்ட்ஸ் 2.68% மற்றும் அதானி டோட்டல் கேஸ் 2.15% என குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.


Click it and Unblock the Notifications
