உத்தரகாண்ட் சுரங்கத்தை நாங்கள் கட்டவில்லை.. சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அதானி குழுமம்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சுரங்க கட்டுமான பணியில் நாங்கள் ஈடுபடவில்லை என அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 18 நாட்களாக இவர்களை மீட்க தொடர் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். தொடர் முயற்சி காரணமாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்க முடிந்திருக்கிறது. இது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஆனாலும், அவர்கள் உள்ளே சிக்கி 18 நாட்கள் ஆகிவிட்டதால் தீவிர மனசோர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். எனவே மீட்பு பணியை துரிதப்படுத்தி அவர்களை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
ஆனால் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது, இதுவரை சுரங்கத்தின் வாயிற் பகுதியில் நுழைந்து தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மைதான். மற்ற மலை பகுதியில் இருக்கும் பாறைகளை போல உத்தரகாண்ட் மற்றும் இயமலையை ஒட்டியுள்ள மலையின் பாறைகள் கடினமானவை கிடையாது. இந்த பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது.
எனவே நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும்போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்படுகின்றன. இதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்து துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க போராடி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் இந்த சுரங்கம் அதானியால்தான் கட்டப்பட்டது என சோஷியல் மீடியாக்களில் பேச்சு அடிப்பட தொடங்கியது. இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, "இந்த உத்தரகாண்ட் சுரங்கப்பாதை எந்த தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டது? அதன் பங்குதாரர்கள் யார்? அதில் அதானி குழுமமும் ஒன்றா?" என்று எக்ஸ் சோஷியல் மீடியா தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதானி குழுமம் விளக்கமளித்திருக்கிறது. அதில், "அதானி குழுமத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ சுரங்கப்பாதை அமைத்ததில் எந்தவிதமான நேரடி அல்லது மறைமுகத் தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறோம்.
இந்த சுரங்கப்பாதையை கட்டிய நிறுவனத்தில் எங்களின் எந்த பங்குகளும் கிடையாது. இந்த நேரத்தில், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம். இந்த சுரங்கப்பாதை விபத்தில் எங்களை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளபடுவது தெரியவந்திருக்கிறது. இந்த முயற்சியையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டிக்கின்றோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த சுரங்கத்தை ஐதராபாத்தை சேர்ந்த நவயுகா இன்ஜினியரிங் கம்பெனிதான் கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications