அதேரூட்.. விபத்துக்கு பின் முதல்முறை கிளம்பிய அகமதாபாத் - லண்டன் Air India விமானத்துக்கு வந்த சோதனை
அகமதாபாத்:அகமதாபாத்: கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென்று கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். 241 பேர் இறந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 274 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து இன்று முதல் முறையாக அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு அதேரூட்டில் பயணிக்க தயாராக இருந்த ‛ஏர் இந்தியா' விமானமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு விமான சேவை உள்ளது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி லண்டனுக்கு ஏர் இந்தியா ஏஐ 171 என்ற விமானம் புறப்பட்டது. இது போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமாகும். இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகினர். மேலும் மருத்துவ கல்லூரி விடுதி, குடியிருப்பில் வசித்தவர்களும் பலியானவர்கள். இந்த விமான விபத்தில் மொத்தம் 274 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த விபத்துக்கு பிறகு அகமதாபாத் - லண்டன் இடையே ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு விமானத்தில் சிக்கி ஏர் இந்தியாவின் ஏஐ 171 விமானத்துக்கு பதில் ஏர் இந்தியாவின் ஏஐ 159 விமானம் அகமதாபாத் - லண்டன் இடையே பயணத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது.
இதையடுத்து டெல்லியில் இருந்து ‛ஏர் இந்தியா' விமானம் அகமதாபாத்துக்கு வந்தது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று மதியம் 1 மணிக்கு ‛ஏர் இந்தியா ஏஐ159' என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
‛ஏர் இந்தியா 159' என்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த விமானத்தில் லண்டனுக்கு புறப்பட தயாராகி இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதுபற்றி பயணி ஒருவர் கூறுகையில், ‛‛அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு பயணிக்க இருந்தேன். ஏர் இந்தியா விமானம் மதியம் 1 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால் இந்த விமானம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை விமான பணியாளர்கள் கூறவில்லை'' என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதுபற்றி ‛ஏர் இந்தியா' அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இந்த பிரச்சனையை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் சிறப்பு அனுமதியுடன் இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications