மக்களே குடையை ரெடியா வெச்சுக்கோங்க.. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெளுக்கப் போகும் பலத்த மழை
சென்னை: தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஜூன் 29 மற்றும் 30 ஆகிய திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இரு நாள்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இடி, மின்னலுடன் மழை
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பநிலை
நேற்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. திருத்தணி (திருவள்ளூர்)-103.1, திருச்சி-101.66, மீனம்பாக்கம் (சென்னை), மதுரை நகரம், பாளையங்கோட்டை-101.48, நாகை-100.94, தஞ்சாவூர், வேலூர் 100.4, நுங்கம்பாக்கம் (சென்னை)-100.04டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications