Air India plane crash: விமானத்தில் உண்மையில் பாதுகாப்பான சீட் எது! டேட்டா சொல்வது இதுதான்! நீங்க எதிர்பார்க்காத பதில்
காந்திநகர்: இன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே பொதுவாகவே விமானத்தில் எந்த பகுதி பாதுகாப்பானது என்ற கேள்வி பலருக்கும் எழும்.. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. காயமடைந்தோர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எது பாதுகாப்பானது?
அதேநேரம் விமானத்தில் எந்த பகுதி பாதுகாப்பானது என்ற கேள்வி பலருக்கும் எழும்.. பலரும் அதிக டிக்கெட் கட்டணம் இருப்பதால் விமானத்தின் முன்புறம் இருக்கும் முதல் வகுப்பு அல்லது பிஸ்னஸ் வகுப்பு சீட்களே பாதுகாப்பானது எனப் பலரும் நினைப்பார்கள். ஆனால், உண்மையில் விமானத்தில் எந்த சீட்கள் பாதுகாப்பானது என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாகவும் விடை இருக்கிறது.
விமான பயணங்கள்
ஆனால், இந்தக் கேள்விக்கு விடையைப் பார்ப்பதற்குள் நாம் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பொதுவாகவே விமானப் பயணம் என்பது மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும். வாகன விபத்துகளில் தான் உலகில் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலேயே ரயில் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும். ரயில் விபத்துகளோடு ஒப்பிட்டால் கூட விமான விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதைவிடவே குறைவாகவே இருக்கிறது.
இருப்பினும், விமான விபத்துகள் பேரழிவை ஏற்படுத்துவதால் அவை பெரிய விஷயமாகப் பேசப்படுகிறது. இருப்பினும், உண்மையில் சாலை விபத்துக்களைக் காட்டிலும் விமான விபத்துக்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரவுகளின்படி, விமான பயணத்தில் உயிரிழப்பு விகிதம் 2022ல் ஒரு பில்லியன் பயணிகளுக்கு 50ஆக இருந்தது. அது 2023இல் 17ஆகக் குறைந்துள்ளது. அதாவது 100 கோடி விமானப் பணிகளில் 17 பேர் மட்டுமே உயிரிழக்கும் விபத்துகள் ஏற்படுகிறது.
பாதுகாப்பானது
விமான பயணங்கள் அந்தளவுக்குப் பாதுகாப்பானதாகவே இருக்கிறது. சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். விமானத்தில் எந்த சீட் இருப்பதிலேயே பாதுகாப்பானது. கடந்த 1971 மற்றும் 2005 வரை நடந்த எல்லா விமான விபத்துகளையும் ஆய்வு செய்ததில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஒப்பீட்டளவில் விமானத்தின் பின்புற இருக்கைகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், பின்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு மற்ற பகுதிகளில் உள்ள பயணிகளை விட உயிர் பிழைக்க 40% அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த சீட்
இது தொடர்பாக வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் குறித்து ஆய்வு செய்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. விபத்து ஏற்படும்போது விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்தால் உயிர் பிழைக்க 49% வாய்ப்பு உள்ளது.. விமானத்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தால் 59% வாய்ப்பு உள்ளது, ஆனால் விமானத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்தால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 69% ஆக அதிகரிக்கும்" என்கிறார்கள்.
பொதுவாக முன்புற இருக்கைகள் தான் விபத்துக்களின்போது அதிக ஆபத்தைச் சந்திக்கின்றன. குறிப்பாக விமானம் தரையிறங்கும் போது அல்லது ஓடுபாதையில் ஏற்படும் விபத்துக்களில் முன்பகுதி முதலில் பாதிக்கப்படுவதால் அது அதிக பாதிப்பைச் சந்திப்பதாக இருக்கிறது. அதாவது நீங்கள் அதிக கட்டணம் செலுத்தும் முன்பக்க இருக்கைகள் தான் அதிகம் ரிஸ்கானது. இருப்பதிலேயே மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் பின்பக்க இருக்கைகள் தான் பாதுகாப்பானதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications