ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கலாநிதி, தயாநிதி ஆஜர்
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன்குழும தலைவருமான கலாநிதி மாறன், ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். சன்குழுமம் சார்பில் சாமிநாதனும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஏர்செல் நிறுவன பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க சிவசங்கரனை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தியதாகவும், அதன் மூலம், சன் குழுமம் ஆதாயம் அடைந்ததாகவும் 2ஜி வழக்கில் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராகவும், சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

சிபிஐ குற்றச்சாட்டு
ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
ஆஜராக சம்மன்
இவ்வழக்கில், தயாநிதி, கலாநிதி மற்றும் இதர 6 பேர் மார்ச் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பினார். இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
மார்ச் 2ல் ஆஜர்
கடந்த மார்ச் 2 தேதியன்று இவ்வழக்கு தொடர்பாக மாறன் சகோதர்கள், சன் டைரக்ட் நிறுவனர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே நேரத்தில் ,மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர் ஆஜராகவில்லை. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய மாறன் சகோதர்கள், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
முன்ஜாமீன் மனு விசாரணை
முன் ஜாமீன் மனு மீது சிபிஐ மார்ச்16ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என உத்தவிட்டதோடு, முன் ஜாமீன் மனு மீதான விசாரணையையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீதிமன்ற உத்தரவின்படி, இவ்வழக்கில் மார்ச் 16ம் தேதி பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ, மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் வழங்கினால் வழக்கின் போக்கு பாதிக்கப்படும் என சி.பி.ஐ. தெரிவித்தது.
ஆகஸ்ட் 3ல் விசாரணை
இதனையடுத்து மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 3ம் தேதியன்று பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேஷியாவைச் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி. அனந்தகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆஜராகாததால், அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார்.
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில், கலாநிதி மாறன், தயாநிதிமாறன், சுவாமிநாதன் ஆகியோர் இன்று ஆஜராகியுள்ளனர். இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்குடன் தொடர்பில்லாத ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என்று கூறி மாறன் சகோதரர்கள் சார்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications