கர்நாடக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு! தற்காலிக சபாநாயகர் தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையா கடந்த 20ம் தேதி பதவியேற்ற நிலையில், இன்று முதல் அம்மாநில சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. அதன் முதல் நாளான இன்று 224 எம்எல்ஏக்களும் பதவியேற்கின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஏற்கனவே மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் இருந்த போது 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் மாநிலத்தின் ஆட்சியை காங்கிரஸ்+மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி இழந்தது. புதியதாக பாஜக அதிகாரத்தை கைப்பற்றியது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த அவமானமாக இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என துடித்தது.

இதனையடுத்து கட்சி 135 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இதனையடுத்து யார் அடுத்த முதலமைச்சர் என்கிற பிரச்னை தலைத்தூக்கியது. கட்சிக்காக கடுமையாக உழைத்த டி.கே.சிவகுமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா என இருவரும் இந்த ரேசில் இருந்தனர். பின்னர் ஒருவழியாக பேச்சு வார்த்தை முடிந்து சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து கடந்த 20ம் தேதி இந்த பதவியேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இன்று முதல் 3 நாட்களுக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தின் முதல் நாளான இன்று 224 எம்எல்ஏக்களும் பதவியேற்கின்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைப்பார். கர்நாடக மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேஷ்பாண்டேவை கட்சி தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளது.

இந்நிலையில் இன்றும் நாளையும் எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும். இதனையடுத்து இந்த கூட்டத்தின் இறுதி நாளான 24ம் தேதியன்று புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.












Click it and Unblock the Notifications