நீதிபதி யஷ்வந்த் வர்மா இடமாற்றம்! அலகாபாத் நீதிமன்றம் குப்பைத் தொட்டி அல்ல! பார் கவுன்சில் எதிர்ப்பு
அலகாபாத்: டெல்லி ஹைகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தீவிபத்து நடந்த வீட்டில் இருந்து கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அவரை அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாக மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அலகாபாத் நீதிமன்ற பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அவர் அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

"நாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள் எனும் போது எங்கள் நீதிமன்றத்திற்கு அவரை மாற்ற, நாங்கள் ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல" என கடுமையான வார்த்தைகளை பார் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் பார் கவுன்சில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தின் இந்த முடிவு, அலகாபாத் நீதிமன்றம் என்ன குப்பைத் தொட்டியா என்ற கேள்வியை எழுப்புகிறது. அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வரும் நிலையிலும் கடந்த சில ஆண்டுகளாக புதிய நீதிபதிகள் யாரும் எங்கள் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவில்லை.
பார் கவுன்சிலில் இருப்போரையே நீதிபதிகளாக பதவி உயர்த்தி நியமிக்கும் போது பார் கவுன்சிலிடம் கலந்தாலோசிக்கப்படுவதே இல்லை என்பது எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் ஏதோ ஒன்றில் குறைபாடு இருக்கிறது. இதனால் நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படும் நிலை உள்ளது.
வழக்கறிஞர்கள் பற்றாக்குறையால் பல மாதங்களாக புதிய வழக்குகள் விசாரிக்கப்படாமல் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. அதற்காக அலகாபாத் நீதிமன்றம் குப்பைத் தொட்டி அல்ல. நாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள்தான் என கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த வாரம் ஹோலி பண்டிகையின் போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. யஷ்வந்த் வர்மா வெளியூர் சென்றிருந்த போது அவரது குடும்பத்தினர் இந்த தீவிபத்து குறித்து தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படையினர் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது நீதிபதியின் வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் கட்டு கட்டாக பணம், நகைகள் இருப்பதை கண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸர் வீட்டில் இருந்த பணம், நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த தகவல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த கொலீஜியம் ஆலோசனை நடத்தி, யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்ய முடிவு செய்து அதற்கான கடிதத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
யஷ்வந்த் வர்மா மாற்றப்படவில்லை- உச்சநீதிமன்றம்
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்ட விவகாரத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் யஷ்வந்த் வர்மாவை இடமாற்றியதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்றும் அவரை இடமாற்ற வேண்டும் என்ற முடிவு பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் இன்று விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications