வங்கதேசத்தில் தணியாத வன்முறை.. இந்திய எல்லையில் பதற்றம்? இரவு ஊரடங்கை அறிவித்த மேகாலயா
ஷிலாங்: வங்கதேசத்தில் இப்போது மிக மோசமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த பதற்றமான சூழல் காரணமாக இந்திய எல்லையிலும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் உள்ள பாதுகாப்புப் படையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்த போதிலும், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் எனப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

போராட்டத்தைச் சமாளிக்க எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் பலன் தரவில்லை. இதையடுத்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறிவிட்டார். இப்போது அந்நாட்டின் ராணுவம் அங்குத் தற்காலிக ஆட்சியை அமைத்துள்ளது.
வங்கதேச நாடாளுமன்றம்: பிரதமராக இருந்த ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதைச் சூறையாடினர். அதேபோல வங்கதேச நாடாளுமன்றத்திலும் புகுந்து வன்முறை செய்தனர். இந்தளவுக்கு வங்கதேசத்தில் ரொம்பவே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இதனால் இந்திய வங்கதேச எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்திய எல்லையிலும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: மேகாலயா மாநிலத்தில் வங்கதேசம் உடனான சர்வதேச எல்லையில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஸ்டோன் டைன்சாங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அங்கே நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வங்கதேசத்துடனான சர்வதேச எல்லையில் இரவு ஊரடங்கு விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது" என்று அவர் கூறினார்.
இரவு ஊரடங்கு: இன்று இரவு முதலே இந்த ஊரடங்கு அங்கே அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இந்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சர்வதேச எல்லையில் இருந்து இந்தியப் பகுதியில் 200 மீட்டர் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படை: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையில், எல்லையில் உள்ள இந்தியப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக மேகாலயாவில் உள்ள இந்திய- வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் படையின் ஒன்பது பட்டாலியன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், எல்லைக்குக் கூடுதல் பாதுகாப்புப் படைகளை அனுப்பவும் அரசு தயாராக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனை: மேலும், தேவைப்படும் பட்சத்தில் எல்லை பாதுகாப்புப் படைக்கு மேகாலயா போலீசும் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறையைக் கருத்தில் கொண்டு எல்லை பாதுகாப்புப் படையினர் டிஐஜி, மேகாலயாவின் காவல்துறை இயக்குநர் ஜெனரல், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் பிரஸ்டோன் டைன்சாங் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதன் பின்னரே இரவு ஊரடங்கு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications