லைட்டா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. அமித்ஷா, ஜேபி நட்டாவை வரவேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடந்த பரிதாபம்
அமராவதி: மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்க உதவி செய்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இன்று 4வது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த அமித்ஷா, ஜேபி நட்டாவை சந்திரபாபு நாயுடு வரவேற்றார். இந்த வேளையில் பாஜக தலைவர்கள் செய்த செயல் தெலுங்கு தேசம் கட்சியினரை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
ஆந்திரா சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. இதில் ஆளும் கட்சியாக இருந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கூட்டணியை வீழ்த்தி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் + நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா + பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று காலை 11.27 மணிக்கு ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜேபி நட்டா உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவே அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் விஜயவாடா சென்றார். விஜயவாடாவில் அவர்கள் 2 பேரையும் சந்திரபாபு நாயுடு வாசலில் நின்று வரவேற்றார். அப்போது முதலில் அமித்ஷா காரில் இருந்து இறங்கினார். அவரிடம் சந்திரபாபு நாயுடு கைக்குலுக்கி வரவேற்றார். இதையடுத்து அமித்ஷா சிவப்பு நிற மலர்களால் ஆனா பூங்கொத்தை சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பிறகு இந்த பூங்கொத்தை அங்கிருந்த பாதுகாவலர்கள் வாங்கி அமித்ஷா வந்த காரிலேயே வைக்க முயன்றார்.
இந்த வேளையில் ஜேபி நட்டாவும் காரில் அங்கு வந்தார். அவரிடமும் கைக்குலுக்கி சந்திரபாபு நாயுடு வரவேற்றார். அப்போது ஜேபி நட்டாவிடம் பூங்கொத்து இல்லை. இதனை கவனித்த அமித்ஷா உடனடியாக ஜேபி நட்டாவின் கையை லேசாக தட்டி தான் வழங்கிய அதே பூங்கொத்தை வழங்கும்படி சிக்னல் செய்தார். அதற்கு ஏற்ப பாதுகாவலர்களும் அமித்ஷா வழங்கிய பூங்கொத்தை ஜேபி நட்டாவிடம் வழங்கினார். அதனை ஜேபி நட்டா, சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இதனை பார்க்கும் எதிர்க்கட்சியினர் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். மத்தியில் ஆட்சியில் அமர 16 எம்பிக்களின் ஆதரவை தந்துள்ள நரேந்திர மோடியை 3வது முறையாக பிரதமராக்கி பாஜகவை ஹாட்ரிக் முறையில் மத்தியில் ஆட்சியில் அமர செய்த சந்திரபாபு நாயுடுக்கு பூங்கொத்து கூட தனித்தனியே பாஜக தலைவர்கள் வாங்க மாட்டார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications