அதிமுக பாஜக கூட்டணி தொடரும்.. மனம் திறந்த அமித் ஷா! அப்போ அண்ணாமலை பேசியது?
டெல்லி : கூட்டணி தொடர்பாக சலசலப்புகள் நிலவி வந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான விவகாரத்தில் கடந்த சில வாரங்களாக இரு கட்சியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அமித் ஷா தமிழ்நாட்டில் அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை - புகைச்சல்
சமீபத்தில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த நிலையில், அண்ணாமலை டென்ஷன் ஆனார். தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடந்தபோது பேசிய அண்ணாமலை, தேசியத் தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி, ஒரு தொண்டனாகவே இருந்துவிட்டுப் போய்விடுவேன். அதிமுக நம்மைவிட்டு விலக வேண்டும் என்று தொடர்ந்து செயலாற்றிவரும் நிலையில், நாம் ஏன் அவர்களுக்கு அடிபணிந்து போக வேண்டும் என ஆவேசமாகப் பேசியிருந்தார். இது பாஜக - அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

தேசிய தலைமை
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தது. அதேசமயம், கூட்டணி தொடர்பாக டெல்லி மேலிடம் தான் முடிவெடுக்கும் என பாஜகவின் சீனியர் தலைவர்கள் அண்ணாமலையின் கருத்தை ஏற்காத வகையில் பேசினர். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜகவின் மேலிட தலைவர்களைச் சந்தித்து ஆலோசித்துவிட்டுத் திரும்பினார். டெல்லி விசிட்டுக்குப் பிறகு கூட்டணி தொடர்பாகப் பேசிய அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை குழப்பமே இல்லை. தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

பட்டும் படாமல்
பாஜக டெல்லி தலைமை, அதிமுகவுடன் தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகவும், அண்ணாமலையை கன்வின்ஸ் செய்து அனுப்பி வைத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், பாஜக - அதிமுக என இரு தரப்பினருமே இந்த கூட்டணி விஷயத்தில் பட்டும் படாமலுமே பேசி வருகின்றனர். இதனால், எடப்பாடி பழனிசாமியை விட்டுவிட்டு ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி தினகரன் ஆகியோருடனும், பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து பாஜக கூட்டணி அமைக்கக்கூடும் என்ற பேச்சுகளும் எழுந்தன. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்பதை அமித்ஷா உறுதி செய்துள்ளார். அதுவும் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்றுள்ள சூழலில் அதிமுகவுடன் தான் கூட்டணி எனத் தெரிவித்துள்ளார் அமித்ஷா.

உறுதி செய்த அமித்ஷா
டெல்லியில் நெட்வொர்க் 18 குழுமம் சார்பில் தி ரைசிங் இந்தியா என்ற நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி உடனான கலந்துரையாடலில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்" என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பாஜகவின் அதிகார மையமாக இருக்கும் அமித்ஷா அதிமுகவுடன் தான் கூட்டணி என உறுதி செய்திருப்பது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications