பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என்று "மிரட்டியும்".. அமீத் ஷாவுக்கு பீகார் மக்கள் "பெப்பே"
பாட்னா்: தோல்வியே காணாத தேர்தல் மன்னன், அண்ணன் வியூகம் வகுத்து விட்டால் அதைத் தாண்டி யாரும் வெல்ல முடியாது என்று பாஜகவினரால் மார் தட்டி புகழப்பட்ட அமீத் ஷாவின் திட்டம், பீகாரில் தவிடுபொடியாகியுள்ளது. எப்படிப்பட்ட திட்டமாக இருந்தாலும், என்ன மாதிரி திட்டமிட்டாலும், மக்களின் மனக் கணக்குகளுக்கு முன்பு அத்தனையும் தரைமட்டம்தான் என்பதை பீகார் சட்டசபைத் தேர்தல் நிரூபித்துள்ளது.
அமீத் ஷாவுக்கு நிச்சயம் இது பெரும் தோல்விதான். காரணம், ஜம்மு காஷ்மீரிலேயே எப்படியோ சாதித்து சட்டசபைக்குள் புதிய வரலாறு படைக்க முடிந்த அமீத் ஷாவால், பீகாரில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது சற்று கவலைக்குரிய விஷயம்தான்.
அமீத் ஷாவுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி நிச்சயம், பாஜகவுக்கும் ஒரு ஸ்பீட் பிரேக்கராக அமையும் என்பதால் இது அவர்களுக்குத் தேவைதான்.

மோடியின் வலதுகரம்
பிரதமர் மோடியின் வலது கரமாக திகழ்பவர் அமீத் ஷா. மோடி பிரதமரானபோது ஷா அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதற்கும் மேலே என்று கூறி பாஜகவின் தலைவராக்கினார் மோடி. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

மொத்த இந்தியாவையும் வளைக்க வேண்டும்
ஷாவை பிரதமர் மோடி பாஜக தலைவராக்கியதே, அத்தனை மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான். அதற்கேற்ப செயல்படத் தொடங்கினார் அமீத் ஷா. ஒவ்வொரு தேர்தலாக குறி வைத்து காய் நகர்த்தி வந்தனர்.

மகாராஷ்டிரா, ஹரியானாவில்
ஷாவின் திட்டமிட்ட செயல்பாடு காரணமாக மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் முதல் முறையாக பாஜக ஆட்சியமைத்தது. அதற்கு முன்பு உத்திரப்பிரதேசத்தில் லோக்சபா தேரத்லின்போதே அமீத் ஷா தனது திறமையை நிரூபித்து விட்டார்.

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட்
இதேபோல ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் புதிய வரலாறு படைத்தது பாஜக. இதற்கும் அமீத் ஷா்வின் வியூகங்களே காரணம் என பாஜக பெருமைப்பட்டது.

பீகாலில் பலத்த அடி
இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் மோடி அலையைத் தக்க வைக்க போராடி வந்த அமீத் ஷாவுக்கு இன்று பீகார் மக்கள் அடி கொடுத்து விட்டனர். மோடி அலையும் கிடையாது, அமீத் ஷா உத்திகளும் வெல்லாது என்பதை அவர்கள் நிரூபித்து விட்டனர்.

ஒற்றுமையாக நின்று சாதித்த நிதீஷ் - லாலு
பீகார் சட்டசபைத் தேர்தலில் ஒற்றுமையாக நின்று, ஒருங்கிணைந்து சந்தித்தால்தான் வெல்ல முடியும். இல்லாவிட்டால் பாஜக தனது நரித்தனத்தால் வென்று விடும் என்பதை புரிந்து நிதீஷும், லாலுவும் ஒற்றுமையாக உறுதியாக செயல்பட்டனர். இடையில் முலாயம் சிங் யாதவால் குழப்பம் வந்தபோதும் கூட இவர்கள் பிரியாமல் உறுதியாக நின்றார்கள். காங்கி்ரஸும் கட்டையைக் கொடுக்காமல் கை கொடுத்தது. இப்படி ஒற்றுமையாக நின்று தேர்தலைச் சந்தித்ததால்தான் இன்று பீகாரில் பாஜகவை வீழ்த்த முடிந்திருக்கிறது.

தொட்டதெல்லாம் துலங்காது
அமீத் ஷா தொட்டது துலங்கும் என்ற பாஜகவினரின் நம்பி்கை முதல் முறையாக பெரிய அளவில் சிதறடிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு மக்கள் போட்ட ஸ்பீட் பிரேக்க போலத்தான். நிதானமாக செயல்படுங்கள் என்று மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நல்லவேளை தமிழகம் தப்பியது
பீகாரில் பாஜக தோற்றதால் தமிழகத்திற்கும்ததான் நிம்மதி. பீகாரில் ஒருவேளை பாஜக பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால், அதை வைத்து அமீத் ஷா, தமிழக கட்சிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி பலரை இழுத்து, சில கட்சிகளை உடைத்து மக்களை திசைதிருப்பி நிலைமையை பாஜகவுக்கு சாதகமாக மாற்றும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருப்பார். ஆனால் அது தற்போது சாத்தியமில்லாமல் போய் விட்டது.












Click it and Unblock the Notifications