ஜெ. மேல்முறையீட்டு மனு விசாரணையில் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல்!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களையும் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஏப்ரல் 18-ந் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனிடையே ஜெயலலிதா உள்ளிட்டோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இம்மனுவை உச்சநீதிமன்ற உத்தரவுப் படி தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரிக்க இருக்கிறார். அவர் தற்போது விடுப்பில் இருப்பதால் இந்த மனுவை நீதிபதி பில்லப்பா நேற்று விசாரித்து வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணையின் போது தாங்களும் ஒரு தரப்பாக இருந்தோம். அதனால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இம்மனுவை ஏற்பது குறித்து திங்கள்கிழமையன்று முடிவு செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications