அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 23% உயர்வு... 62 வயதில் ஓய்வு - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி
அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 23% உயர்வு... 62 வயதில் ஓய்வு - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி
அமராவதி: அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயதை 60இல் இருந்து 62 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது ஆந்திர மாநில அரசு. அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின்படி, அடிப்படை ஊதியம் 23 சதவீதமாக உயர்த்தி கடந்த 1ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படும்.
ஆந்திராவில் அரசுத்துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை, பணியாற்றி வரும் லட்சக்கணக்கானோரின் சம்பள விகிதம், ஒய்வூதியர் பங்களிப்பு, அரசு ஊழியர்கள் ஒய்வு வயது குறித்து முதன்மை செயலாளர் சமீர்ஷர்மா தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஊழியர் சங்கத்தினருடன் இணைந்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பேசிய அவர், "அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின்படி, அடிப்படை ஊதியம் 23 சதவீதமாக உயர்த்தி கடந்த 1ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படும். இந்த முடிவால் அரசுக்கு ரூ.10,247 கோடி கூடுதல் சுமை ஏற்பட உள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட உள்ளது. கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். ஜெகன் அண்ணா ஸ்மார்ட் டவுன்ஷிப்ஸ்- லே அவுட்களில் 10% மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும். வீடற்ற அரசு ஊழியர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58ஆக இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது இருமுறை அதை உயர்த்தி 60 ஆக உயர்த்தி அதிகரித்தார். ஓய்வுபெறும்போது ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பலன்களை கொடுப்பதை தற்காலிகமாக தள்ளிப் போடுவதற்காகவே ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறித்து ஆலோசனை செய்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகனின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தடுக்கப்படுவதாக விமர்சனங்களும் எழுந்துவருகின்றன.
பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது வேலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் ஓய்வு பெற்றால் அந்த காலி பணியிடங்களுக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இளைய தலைமுறையினருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications