செம்மரம் வெட்ட வந்தால் சுட்டு வீழ்த்துவோம்.. தமிழக தொழிலாளர்களுக்கு ஆந்திர டிஐஜி எச்சரிக்கை!
திருமலை: ஆந்திரா வனப்பகுதியில் செம்மரம் வெட்ட முயன்றாலோ அல்லது தாக்குதல் நடத்தினாலோ எவ்வித பாரபட்சமின்றி தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும் என செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி காந்தாராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, கர்னூல், நெல்லூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேஷாசல வனப்பகுதியில் வளர்க்கப்படும் செம்மரங்களை கடத்தல் கும்பல் தொடர்ந்து வெட்டி கடத்துகின்றன.

செம்மரம் வெட்டும் கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக போலீசாரும் வனத்துறையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால், செம்மரக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. இதைத் தடுக்க செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி காந்தாராவ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் செம்மரக் கடத்தல் கும்பலை தடுக்கவும், செம்மரம் வெட்ட வரும் தமிழக கூலிதொழிலாளர்களுக்கு எச்சரிக்கைவிடும் வகையில் தமிழக வனத்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
பணத்துக்காக தமிழகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செம்மரம் வெட்டுவதற்காக கூலி தொழிலாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்களை பிடிக்க முயற்சிக்கும்போது வனத்துறை மற்றும் போலீசார் மீது அவர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிவிடுகிறார்கள்.
மரம் வெட்டுவதற்காக வந்து 2 வனத்துறை அதிகாரிகளை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துள்ளனர். இனி வரும் காலங்களில் மரம் வெட்ட முயன்றாலோ அல்லது தாக்குதல் நடத்தினாலோ எவ்வித பாரபட்சமின்றி தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும்.
இது தொடர்பாக தமிழகத்தில் இருந்துவரும் கூலிதொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டுவதற்காக செல்ல வேண்டாம் என வலியுறுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications