காதல் விவகாரம்: கல்லூரி பேராசிரியர் மீது ஆசிட் வீசிய ஆந்திரா பல்கலைக்கழக மாணவி
குண்டூர்: ஆந்திராவில் தன்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கல்லூரி பேராசிரியர் மீது முதுகலை மாணவி ஆசிட் வீசினார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நல்லபடுவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் வெங்கடரமணா. அவர் நரசராவ்பேட்டையில் உள்ள டிகிரி கல்லூரியில் பணியாற்றியபோது இளங்கலை பட்டம் படித்த மாணவி சௌஜன்யாவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதன் பிறகு சௌஜன்யா கணக்கில் முதுகலை பட்டம் படிக்க விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டார். வெங்கடரமணாவும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். இதற்கிடையே பேராசிரியர் கடந்த ஆண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்த சௌஜன்யா வெங்கடரமணாவை பழிவாங்க பாலிடெக்னிக் கல்லூரிக்கு சனிக்கிழமை வந்தார். தன்னை யாரும் அடையாளம் காணாமல் இருக்க அவர் புர்கா அணிந்து வந்தார்.
மதிய உணவு இடைவேளையில் வெளியே வந்த பேராசிரியர் மீது சௌஜன்யா ஆசிட் ஊற்றினார். அப்போது மாணவின் முகத்திலும் ஆசிட் பட்டது. காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிட் வீச்சில் பேராசிரியரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications