திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
அமராவதி: ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெறுகிறது. இதில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் ஆகியவை ஒன்றாக நடைபெற உள்ளது. ஆந்திராவில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார்.
இந்த மாநிலத்தில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 88 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 159 தொகுதிகளில் வென்று மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 15 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வென்றார். காங்கிரஸ், பாஜக கட்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் ஆந்திரா மாநில சட்டசபையின் பதவிக்காலம் ஜுன் 11ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 13ம் தேதி ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதி மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது.
இந்த 2 தேர்தல்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர். மாறாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளன. சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 17 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில் தான் பாஜக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி முன்னாள் மத்திய இணையமைச்சர் ஒய்எஸ் சுஜானா சவுத்ரி விஜயவாடா மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் சீனிவாஸ் ராவ் கைகலுரு தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். எச்சர்லா தொகுதியில் என் ஈஸ்வர் ராவ், விசாகப்பட்டினம் வடக்கு தொகுதியில் விஷ்ணு குமார் ராஜு, அரக்கூ வேலி தொகுதியில் ராஜாராவ், பட்வெல் தொகுதியில் பாஜக மாநில துணை தலைவர் ரோசண்ணா போட்டியிடுகின்றனர்.
அதேபோல் ஜமலாமடுகு தொகுதியில் ஆதிநாராயண ரெட்டி, அதோனி தொகுதியில் பார்த்த சாரதி, தர்மாவரம் தொகுதியில் பாஜகவின் தேசிய செயலாளர் சத்யகுமார், அனபர்தி தொகுதியில் சிவகிருஷ்ணம் ராஜு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதன்மூலம் ஆந்திர சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான அனைத்து வேட்பாளர்களும் அறிவித்து முடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் பாஜக 6 இடங்களிலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications