வெறும் ரூ.99க்கு மது கிடைக்கும்.. சந்திரபாபு நாயுடு எடுத்த மேஜர் முடிவு! குதுகலமான ஆந்திர குடிமக்கள்
அமராவதி: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு இப்போது புதிய மதுபான கொள்கைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கொள்கை வரும் அக். முதல் அமலுக்கு வரும் என்றும் இதன் கீழ் நுகர்வோர் எந்த பிராண்டின் மதுவையும் ₹99க்கு வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மது கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
நமது நாட்டை பொறுத்தவரை மதுபான கொள்கை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதுபான கொள்கை இருக்கிறது.

மது கொள்கை: குஜராத், பீகார் மாநிலங்களில் மதுபானங்களுக்கு முழுமையாக அனுமதி இல்லை. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் நிலையில், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் பெரியளவில் எந்தவொரு கட்டுப்பாடும் இருப்பதில்லை. இப்படி மது கொள்கை என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.
இதற்கிடையே ஆந்திராவில் இப்போது புதிய மதுபான கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த புதன்கிழமை அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தரம், அளவு மற்றும் சரியான விலையை உறுதி செய்வதே இந்த மதுபான கொள்கையின் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் அரசு: இதற்கு முன்பு ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 வரை ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வந்த மதுபான கொள்கைகளை நீக்கும் வகையில் இந்த புதிய கொள்கை இருக்கிறது. ஜெகன் அரசு 2019 ஆந்திர தேர்தல் சமயத்தில் பூரண மது விலக்கைக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்திருந்தது. இருப்பினும், ஆட்சி அமைத்த பிறகு பூரண விலக்கிற்குப் பதிலாகக் கடுமையான கட்டுப்பாடுகளை கெஜன் அரசு கொண்டு வந்தது.
ஜெகன் அரசின் இந்த முடிவை அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்படும் என உறுதியளித்தார். ஆட்சி அமைத்தவுடன் ஜெகன் அரசு கொண்டு வந்த மதுபான கட்டுப்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டார்.
புதிய மதுபான கொள்கை: அதில் ஜெகன் அரசின் நடவடிக்கையால் ஆந்திர அரசுக்கு 18,860.51 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முக்கிய இந்திய பிரண்டு மதுக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் போலி மதுபான விற்பனை அதிகரித்ததாகவும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு இப்போது புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பார்த்தசாரதி, "புதிய கொள்கையில் லாட்டரி முறையில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்காக விண்ணப்பக் கட்டணமாக ₹2 லட்சம் வசூலிக்கப்படும். உரிமம் ஒதுக்கப்பட்ட பிறகு எல்லா இடங்களிலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
உரிம கட்டணம்: உரிமக் கட்டணம் என்பது ஏரியாவை பொறுத்து மாறுபடும். ₹50 லட்சம் முதல் ₹85 லட்சம் வரை நான்கு அடுக்குகளில் உரிமை கட்டணம் இருக்கும். கடை உரிமையாளர்கள் தங்கள் விற்பனையில் 20% லாபத்தைப் பெறுவார்கள். இதில் குறைந்தபட்சம் 10% இடங்களில் கள் விற்பனையும் அனுமதிக்கப்படும்.
மேலும், தனியாக பிரீமியம் கடைகளுக்கு பெர்மிட் வழங்கப்படும். 12 பிரீமியம் கடைகளுக்கு 5 ஆண்டுகள் உரிமம் வழங்கப்படும். இந்த பிரீமியம் கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.15 லட்சமாகவும் உரிமக் கட்டணம் ₹1 கோடியாக இருக்கும். அதேநேரம் திருப்பதியில் பிரீமியம் கடைகள் அனுமதிக்கப்படாது.
முந்தைய ஜெகன் அரசு மதுபானக் கொள்கையைத் தவறாகக் கையாண்டது. இதனால் மாநில அரசுக்கு மிகப் பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தரமற்ற மதுவை வழங்கியதால், உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. இதை எல்லாம் சரி செய்யும் விதமாகவே இப்போது புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்துள்ளோம்" என்றார்.
குறைந்த விலையில் மது: இந்த புதிய கொள்கை வரும் அக். முதல் அமலுக்கு வரும். இதன் கீழ் ckdkNd எந்த பிராண்டின் மதுவையும் ₹99க்கு வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மது கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு 2000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications