ராணுவத்துக்கு முழு பவர்.. பாகிஸ்தான் ஒரு அடி எடுத்து வச்சாலும் பதிலடி கொடுங்க.. தலைமை தளபதி உத்தரவு!
டெல்லி: தாக்குதல் நிறுத்தத்தை மீறி இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தலைமை தளபதி உபேந்திர திவேதி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததோடு எல்லை பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரபடுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக நேற்று மாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இருதரப்பு மோதலை நிறுத்திக்கொள்வது என இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதலை நடத்தின. இதனால், மீண்டும் ஒரு பதற்றச் சூழல் உருவானது. இன்று காலை முதல் எல்லையோர பகுதிகளில் அமைதி நிலவுகிறது.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி சி.டி.எஸ் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி மற்றும் விமானப்படைத் தளபதி ஏபி சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரு நாடுகளிடையே நேற்று மாலை போர் முடிவுக்கு வந்த பிறகும் இரவு பல மணி நேரம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டடாகத் தெரிகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மேற்கு எல்லைகளின் இராணுவத் தளபதிகளுடன் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி ஆலோசனை நடத்தினார். நேற்று போர் நிறுத்தத்திற்குப் பிறகு வான்வெளி மீறல்களின் விளைவாக, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி மேற்கு எல்லைகளின் ராணுவத் தளபதிகளுடன் பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு செய்தார்.
மே 10, 2025 அன்று DGMO பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்ட புரிதலின் எந்தவொரு மீறலுக்கும் எதிர்வினையாற்ற இராணுவத் தளபதிகளுக்கு முழு அதிகாரத்தையும் ராணுவத் தலைமைத் தளபதி வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications