50 கி.மீ. தாயின் உடலை சுமந்து சொந்த ஊரில் அடக்கம் செய்த ராணுவ வீரர்.. காஷ்மீரில் நெகிழ்ச்சி
இறந்த தாயாரின் உடலை ராணுவ வீரர் தனது தோள்களில் சுமந்தபடி 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சொந்த ஊரில் அடக்கம் செய்துள்ளார்.
ஸ்ரீநகர்: சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற தாயின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவரது உடலை 50 கி.மீ. சுமந்து வந்து நல்லடக்கம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம், கருணா கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் முகமது அப்பாஸ். இவர் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பணியாற்றி வருகிறார். இவருடன் வசித்து வந்த தாயார் சகினா பேகம் கடந்த 28-ந்தேதி இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

தமது உடலை சொந்த கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென அவரது தாயார் விடுத்த இறுதி கோரிக்கை நிறைவேற்ற முடிவு செய்தார் அப்பாஸ். அதன்படி, தாயின் உடலை கொண்டு சென்றபோது, குப்புவாரா வரை மட்டுமே அவரால் வாகனத்தில் பயணிக்க முடிந்தது.
தொடர்ந்து கருணா கிராமத்திற்கு போக முடியாத வகையில் பனிக்கட்டிகளால் அந்தப் பகுதி சாலை துண்டிக்கப்பட்டு விட்டது. ஹெலிகாப்டருக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுகியும், மோசமான பனிப்பொழிவு காரணமாக ஹலிகாப்டரும் கிடைக்கவில்லை.
இதனால் 5 நாள் காத்திருந்தும் பலன் எதுவும் இல்லை. இனியும் தாமதிக்காமல் தன்னுடைய தாயின் விருப்பதை நிறைவேற்ற அவரது உடலை நடையாகவே தூக்கி செல்லலாம் என்று அப்பாஸ் முடிவு செய்தார்
சில நெருங்கிய உறவினர்கள் உதவியுடன் அவர் தனது தாயாரின் உடலை தோள்களில் சுமந்தபடி, 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சொந்த ஊரை அடைந்தார். அதன்பின்னர் தாயின் உடலை அங்கு நல்லடக்கம் செய்தார். நடந்தே சென்று அவர் தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications