370-வது பிரிவு ரத்து: காஷ்மீர் மக்களை ஏமாற்றி, மோடியோடு சேர்ந்து செயல்பட்டாரா பரூக் அப்துல்லா?
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததற்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உடந்தையாக இருந்ததாக RAW அமைப்பின் முன்னாள் தலைவர் ஏசி தவுலத் எழுதிய புத்தகத்தில் அதிர்ச்சி தகவல் இடம் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் என்பது ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தது. இந்த மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்குவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருந்தது.

2019-ம் ஆண்டு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்த உடனேயே, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது; மேலும் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன; ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டசபையுடன் செயல்படும்; லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபை இல்லாமல் இருக்கும் எனவும் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது.
இந்த நிலையில் மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா' Research and Analysis Wing (RAW) முன்னாள் தலைவர் ஏசி தவுலத் தாம் எழுதிய The Chief Minister and The Spy' புத்தகத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட போது நடந்த நிகழ்வுகளை விவரித்துள்ளார். ஏசி தவுலத் தமது புத்தகத்தில், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது; அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 4-ந் தேதி, பிரதமர் மோடியை பரூக் அப்துல்லாவும் அவரது மகன் ஒமர் அப்துல்லாவும் சந்தித்து பேசினர் என பதிவு செய்துள்ளார்.
ஏசி தவுலத் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த தகவல் ஜம்மு காஷ்மீரில் பெரும் அரசியல் புயலை வீசி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிரான, மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்துக்கு பரூக் அப்துல்லாவும் அவரது மகன் ஒமர் அப்துல்லாவும் உடந்தையாக இருந்துள்ளது மிகப் பெரிய துரோகம் என்று ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவரான சஜாத் லோனே, தவுலத் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தகவலை பரூக் அப்துல்லாவும் அவரது தேசிய மாநாட்டுக் கட்சியும் மறுக்கலாம். தனிப்பட்ட முறையில் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா குறித்த இந்த உண்மைகள் எனக்கு ஆச்சரியம் தரவில்லை. 2019-ம் ஆண்டு அப்பாவும் மகனும் பாஜகவுக்கு செய்த உதவிக்காகவே 2024-ல் காஷ்மீர் ஆட்சி அதிகாரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரான மெகபூபா முப்தியின் மகள் இலிஜா முப்தி, பரூக் அப்துல்லா குடும்பம் மீது ஏற்கனவே இருந்த சந்தேகம் இப்போது உறுதியாகி இருக்கிறது என சாடியுள்ளார்.
பரூக் அப்துல்லா மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த பரூக் அப்துல்லா, தவுலத் எழுதிய புத்தகத்தில் ஏராளமான பிழைகள் உள்ளன.. அவற்றை விவரிக்கவும் முடியாது. இது துரதிருஷ்டவசமானது. என்னை உண்மையான நண்பராக கருதி இருந்தால் அவர் இப்படி எழுதி இருக்கக் கூடாது. 1996-ம் ஆண்டு என்னை முதல்வராக்க வேண்டும் என தவுலத்திடம் நான் கேட்டுக் கொண்டதாக எல்லாம் எழுதி இருப்பது அபத்தமானது. மத்திய அரசு 370-வது பிரிவை ரத்து செய்த போது நாங்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications