அரசு வீட்டை காலி செய்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த வாரம் அரசு வீட்டை காலி செய்ய உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
அவருக்கு திலக் லேன் பகுதியில் அரசாங்கம் வீடு வழங்கியது. ஆனால் அந்த வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேயே கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் அரசு அரசு வீட்டில் தொடர்ந்து வசித்து வருகிறார்.
அவர் பதவி விலகியதும் அரசு வீட்டை காலி செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு 15 நாள் கால அவகாசம் அளிக்கப்படும். இதனால் கடந்த மார்ச் 1-ந் தேதி அவரை வீட்டை காலி செய்யுமாறு டெல்லி பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
அரசு வீட்டில் தொடர்ந்து வசித்தால் அதற்காக மாதம் 85 ஆயிரம் ரூபாய் வாடகை தரவேண்டும் என்றும் டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனினும், பிளஸ் 2 படித்து வரும் தன் மகளின் தேர்வு முடியும்வரை அங்கு வசிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது அவரது மகள் பிளஸ் 2 தேர்வு மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதி முடித்துவிட்டதால் வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார். டெல்லியில் அவருக்கு வீடு எதுவும் இல்லாதபோதிலும், மேற்கு டெல்லியில் புதிய வீடு பார்த்து குடியேற முடிவு செய்துள்ளார்.
அதேசமயம், மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான தன் மனைவிக்கு ஒதுக்கப்படும் வீட்டையும் கெஜ்ரிவால் எதிர்பார்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications