வெற்றியாக வெடித்த “கேஸ்”.. ராஜஸ்தானில் முந்தும் பாஜக! பெண்களை டார்கெட் செய்து வழங்கப்பட்ட வாக்குறுதி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், அங்கு அக்கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்த விசயங்கள் என்ன என்று பார்ப்போம்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், பாஜக ராஜஸ்தானில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்று பார்ப்போம். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஜெய்ப்பூரில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை வெளியிட்டு பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஊழல், விவசாயிகளை அவமதித்தல், தேர்தல் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு ஊழல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்

உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு தலா ரூ.450 விலையில் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர்கள் வழங்குவதாகவும், ஐந்தாண்டுகளில் 2.5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்குவதாகவும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ஆண்டுக்கு ரூ.12,000 ஆக உயர்த்துவதாகவும் தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்து உள்ளது. தற்போது விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தை (ERCP) முடிப்பதாகவும் பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேசிய திட்ட அந்தஸ்து வழங்க அசோக் கெலாட் அரசு கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், மத்திய அரசுடன் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் இந்த திட்டம் முடிக்கப்படும் என்று பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், விவசாயிகளின் நிலத்தை பறிமுதல் செய்வது மற்றும் ஏலம் விடுவதை நிறுத்துவதற்கான அறிவிப்பு கொண்டு வரப்படும் என்றும், காங்கிரஸ் அரசின் நியாயமற்ற நடவடிக்கை காரணமாக தங்கள் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக ஜேபி நட்டா உறுதி அளித்தார். 6 லட்சம் கிராமப்புற பெண்களுக்கு திறன் பயிற்சி, ராஜஸ்தான் பொருளாதாரத்தை 350 பில்லியன் டாலராக மாற்ற பாஜக உறுதிபூண்டு உள்ளதாகவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications