அம்மாவுக்கு 19ஆம் தேதி பெயில்!!… அக்ஹாராவில் ஜோதிடர் பரபரப்பு..ஆனா அன்னிக்கு சன்டே ஆச்சே ஜோசியரே!!
பெங்களூர்: அம்மாவுக்கு 19ஆம் தேதி பெயில் நிச்சயம் கிடைச்சுரும்... அப்புறம் அவங்களை யாரும் அசைக்க முடியாது... அவங்க திரும்ப வந்து நாடாளுவாங்க என்று கூறி பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஒரு ஜோதிடர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதிமுதல் இந்த சிறை வளாகத்தினை கோயில்போலவே மாற்றி வருகின்றனர் அதிமுகவினர். மொட்டை அடிப்பதும், தேங்காய் உடைப்பதும், சிறை வளாகத்திலேயே அங்கப்பிரதட்சணம் செய்வதும் என அமர்களப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்துக்கு வெளியே ஜோதிடர் ஒருவர் சுற்றி வருகிறார். அவர் பெயர் நாகராஜாம். அம்மாவுக்கு இந்த தண்டனை கிடைக்க முக்கிய காரணம், அவர் 16.5.2011 அன்று பதவியேற்றதுதான். அந்த நாளும் நேரமும் சரியில்லை. அதனால்தான் இந்த சிறைத் தண்டனை கிடைத்துள்ளது என்று கூறி வருகிறார்.
இதை அவருக்கு ஏற்கனவே ‘பேக்ஸ்' மூலம் அனுப்பினேன் என்று கூறி அந்த பேப்பர்களை கைகளில் ஆதாரமாக வைத்துக்கொண்டுள்ளார்.
வரும் 19-ஆம்தேதிக்கு மேல் அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முன்பை விட வேகமாக செயல்படுவார். மீண்டும் நாடாளுவார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
அம்மாவுக்கே ஜோதிடம் சொல்வதால், அவரைச் சுற்றி அ.தி.மு.க.வினர் கூடி நின்று அவரது ஜோதிடத்தை ஆர்வத்துடன் கேட்கின்றனர். இதனால் ஜோதிடரைச் சுற்றி எப்போதும் பரபரப்பாக கூட்டம் இருக்கிறதாம்.
ஒரே ஒரு டவுட் ஜோசியரே...!
ஆனா நமக்கு ஒரே ஒரு டவுட் இருக்கு ஜோசியரே.. நீங்க சொல்ற 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. பூமி மட்டுமல்லாமல் செவ்வாய் கிரகத்தில் கூட எந்த கோர்ட்டும் ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்காது என்று நினைக்கிறோம். பொறவு எப்படி ஜோசியரே 19ம் தேதி கண்டிஷனா பெயில் கிடைக்கும்னு அடிச்சுச் சொல்றீங்க...!


Click it and Unblock the Notifications
