300 மருந்துகள் தடை மீதான “இடைக்காலத் தடை” வழக்கு முடியும்வரை நீடிக்கும்- டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: இந்தியாவில் 300 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வாங்கப்பட்ட தடை உத்தரவினை ரத்து செய்யக் கோரி மத்திய அரசு சார்பில் டெல்லி ஹைகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி ஹைகோர்ட் இந்த இடைக்கால தடையை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
விக்ஸ் ஆக்ஷன் 500, கோரக்ஸ் உள்ளிட்ட 300 வகையான மருந்துகளை விற்பதற்கு தடை விதித்து கடந்த 10 ஆம் தேதி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து, அந்த மருந்துகளை தயாரிக்கும் 30 மருந்து நிறுவனங்கள், டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதை ஏற்று, மத்திய அரசின் தடையை செயல்படுத்த ஹைகோர்ட் 21 ஆம் தேதிவரை இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி ராஜீவ் சகாய் எண்ட்லா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "இடைக்கால தடையானது, பொது நலனுக்கும், நோயாளிகளின் பாதுகாப்புக்கும் எதிரானது. மருந்து நிறுவனங்களின் நோக்கம் கெடுதலானது. அவை லாபம் சம்பாதிப்பதையே இலக்காக கொண்டுள்ளன. ஆகவே, இடைக்கால தடையை நீக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதுவரை இடைக்கால தடை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications