ஜெயலலிதாவை 'மிஸ் பண்ணும்' பெங்களூர் நிருபர்கள்.. போர் அடிக்கிறதாம்!
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி சென்றுள்ள நிலையில், பெங்களூரிலுள்ள பத்திரிகை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் பரபரப்பு செய்திகளின்றி, போரடிப்பதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்க முதல்வராக பெங்களூர் வந்தார் ஜெயலலிதா. எனவே, நாடு முழுவதிலுமுள்ள ஊடக நிருபர்கள், பெங்களூர் கோர்ட் வளாகத்துக்கு வெளியே குவிந்திருந்தனர். அப்போது ஆரம்பித்தது வழக்கின் பரபரப்பு.

எப்படி இருக்கிறார்
சொத்துக் குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. இதனால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் பெங்களூர் பத்திரிகையாளர்களுக்கோ, சிறைக்குள் ஜெயலலிதா எப்படி இருக்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பதை கண்டறிந்து செய்தி வெளியிடும் அசைன்மென்ட் ஒதுக்கப்பட்டது. பத்திரிகையாளர்களும் கடமையே கண்ணாக அதைச் செய்தார்கள்.

நீதிமன்றத்தால் பிசி
இந்நிலையில்தான், செப்டம்பர் 29ம்தேதி ஜாமீன் கேட்டு ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா, எந்த நீதிபதி விசாரிப்பார் போன்ற தகவல்களை சேகரிக்க அப்போது பத்திரிகையாளர்கள் பிசியாகினர். செப்டம்பர் 30ம்தேதி, ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் அக்டோபர் 1ம்தேதி விசாரிப்பதாக அறிவித்தது.

கோர்ட்டில் கூட்டம்
அக்டோபர் 1ம்தேதி ஜெயலலிதா ஜாமீன் மனுவை நீதிபதி ரத்தினகலா தலைமையிலான சிறப்பு பெஞ்ச் விசாரித்தது. இதனால், கோர்ட்டில் கட்டுக்கடங்கா பத்திரிகையாளர்கள் கூட்டம் அலைமோதியது. மூச்சுவிடவும் வழியின்றி நிருபர்கள் தவித்தனர். ஆனால், அரசு வக்கீல் இல்லாததை காரணமாக கூறிவிட்டு சட்டுபுட்டென வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி. இதனால் மீண்டும் பரபரப்பு.

ஒத்திவைத்த கோர்ட்
அதிமுக வக்கீல்கள் ஹைகோர்ட் பதிவாளரை அணுகி, தலைமை நீதிபதியிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். பவானிசிங்கிற்கு அரசு வக்கீல் அதிகாரம் கிடைத்தது. அக்டோபர் 2ம்தேதி மீண்டும் கோர்ட் கூடியபோது, அதே கூட்டம், அதை புழுக்கம். ஆனால் ரத்தினகலா, இதை வழக்கமான பெஞ்ச் விசாரிக்கும். அவசர வழக்கை மட்டுமே தன்னால் விசாரிக்க முடியும் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

தடுமாறிய நிருபர்கள்
ஒருவழியாக ரெகுலர் பெஞ்ச் கடந்த 7ம்தேதி ஜாமீன் மனுவை விசாரித்தது. அரசு வக்கீல் பவானிசிங் திடீரென பல்டி அடித்ததால், அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்பதை கண்டறியும் பணி ரிப்போர்டர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு நடுவே, அதிமுக ஆதரவு வக்கீல்கள், அம்மாவுக்கு ஜாமீன் கிடைத்ததாக கூறி, அது ஊடகங்களில் வெளியானதும், நீதிபதி ஜாமீன் இல்லை என்று கூறியதால் பிறகு செய்தியை மாற்றிப்போட்டு அசடு வழிந்ததும் நிருபர்களின் கள வரலாறு.

விஐபிகள் வருகை கண்காணிப்பு
அக்டோபர் 9ம்தேதி ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 17ம்தேதிதான் விசாரணைக்கு வந்தது. இருப்பினும் இடைப்பட்ட காலத்தில், ஜெயலலிதாவை சந்திக்க யார், யார் சிறைக்கு வருகிறார்கள், சிறையில் அவருக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ள பரப்பன அக்ரஹாரா சிறையையே சுற்றி வந்தனர் நிருபர்கள். இதனால் கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் நிகழ்ச்சிகளுக்கு கூட கன்னட மீடியாக்களே முக்கியத்துவம் தரவில்லை.

சிறைக்கு ஒரு பிரிவா..
வழக்கமாக, கிரைம், நீதிமன்றம், அரசியல், வணிகம், விளையாட்டு என்ற பிரிவுகளின்கீழ் நிருபர்கள் பணியாற்றுவார்கள். ஆனால் சிறை பீட் என்ற புது பீட்டே பெங்களூர் பத்திரிகைகளில் ஆரம்பிக்கப்பட்டது என்றால் அது ஜெயலலிதாவுக்காகத்தான். ஷிப்ட் போட்டு சிறை அருகே பாய் விரித்து படுத்துவிட்டனர் நிருபர்களும், புகைப்படக்காரர்களும்.

17ம்தேதி புஸ்வானம்
இந்நிலையில், 17ம்தேதி உச்சநீதிமன்றம் ஜெயலலிதா வழக்கில் ஜாமீன் வழங்கியதும், அத்தனை மீடியாக்களும் சிறை வளாகத்தில் முந்தியடித்து இடம் பிடித்துக்கொண்டன. 17ம்தேதி, சிறப்பு நீதிமன்றத்தில் சில நிருபர்கள் குவிக்கப்பட்டு, அங்கு ஆர்டர் காப்பி வந்ததா என்பதில் கவனம் வைத்திருந்தனர். அங்கும் வராததால், அன்றைய தினம் பரபரப்புக்கு பிறகு புஸ்வானமானது.

18ம்தேதி கிளைமாக்ஸ்
அடுத்தநாள் 18ம்தேதி, கிளைமாக்ஸ் திரில். காலையில் நீதிபதி குன்ஹா நீதிமன்றம் வந்ததில் இருந்து அப்டேட் செய்தபடி இருக்க வேண்டிய கட்டாயம் நிருபர்களுக்கு. நீதிமன்றத்தில் சிலர், சிறைக்கு வெளியே பலர் என நாள் முழுக்க காத்திருந்தனர். இதோ, ஆர்டர் காப்பி கிளம்பிடுச்சி, கொண்டு போறவரு வெங்கடேஷ் என லைவ் டெலிகாஸ்ட் போட்டதில் அன்றைய ஹீரோவாக கோர்ட் தபால் ஊழியர் வெங்கடேஷ் மாற்றப்பட்டார்.

மூச்சுவிட்ட நேரம்
அவ்வளவுதான், இதோ வந்துட்டாருல்ல, என சிறைக்கு வெளியே இருந்த நிருபர்கள் வெங்கடேஷை பார்த்து ஆபீசுகளுக்கு அப்டேட் செய்தனர். ஒருவழியாக ஜெயலலிதா வெளியே வந்தார். அத்தோடு விட்டார்களா, அவர் காரில் சென்ற பாதையில் பின் தொடர்ந்தும், சிலர் முன் சென்றும் போகும் வழியில் நடந்த சம்பவங்களை பதிவு செய்தனர். விமான நிலையத்தில் ஜெயலலிதாவின் சிறப்பு விமானம் விண்ணில் பாய்ந்த பிறகுதான், பெங்களூர் நிருபர்கள் பெருமூச்சு விட நேரம் இருந்தது.

கர்நாடகாவில் எதுவும் தேறவில்லை
இப்படியாக 22 நாட்களும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சென்றுகொண்டிருந்த பரபரப்பு வாழ்க்கை இல்லாமல் பெங்களூரிலுள்ள அனைத்து மொழி நிருபர்களுமே வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில், கர்நாடகாவில் ஆட்சி அமைதியாக அல்லவா போய்க்கொண்டுள்ளது. ஜெயலலிதா, நித்தியானந்தா என தமிழகத்து ஆட்களால்தான் தங்களுக்கு பரபரப்பு செய்தி கிடைப்பதாக அலுத்துக்கொள்கின்றனர் கன்னட பத்திரிகை நண்பர்கள்.












Click it and Unblock the Notifications