நீதி நடைமுறையை, ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தலாம் என்பதன் உதாரணம்.. ஜெ.வழக்கு பற்றி நீதிபதி ஆதங்கம்
டெல்லி: அதிகாரத்தில் இருப்பவர்கள் நீதி பரிபாலன நடைமுறையை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு, ஜெயலலிதா வழக்கு ஒரு உதாரணம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் கடுமையாக கூறியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக ஆஜரான, பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது ஆஜராக கர்நாடக அரசால் நியமிக்கப்படவில்லை.

இருப்பினும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையே, ஒரு அனுமதி கடிதத்தை கொடுத்து பவானிசிங்கை ஆஜராக கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் பவானிசிங் ஆஜரானார்.
எனவே, இந்த நியமனம் செல்லாது என்பது அன்பழகன் தரப்பின் உச்ச நீதிமன்ற வாதமாக இருந்தது. இந்த வழக்கு புதுமையானது. பல வழக்குகளுக்கு முன்னுதாரணமாக ஆக வேண்டியது. அதாவது, கீழ்மை நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான ஒரு வழக்கறிஞர், வழக்கை நடத்துபவர் சம்மதம் இன்றியே உயர் நீதிமன்றத்திலும், ஆஜராகலாமா, ஆக முடியாதா என்பதை தீர்மானிக்க இந்தியா முழுமைக்குமே, இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக மாறும்.
எனவே, மிகுந்த கவனத்துடன் வழக்கு விசாரிக்கப்பட்டது. மதியம், 1 மணிக்கு நீதிபதி மதன் லோகூர் முதலில் தனது தீர்ப்பை வழங்கினார். அதில் பவானிசிங் ஆஜரானது தவறு என்று குறிப்பிட்டார். ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்த கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் மதன் லோகூர் தெரிவித்தார்.
தீர்ப்பை தாண்டி, தனது விசாரணையின் மூலம் கிடைத்த அனுபவத்தை கொண்டு, சில கருத்துக்களை கடுமையாக பதிவு செய்துள்ளார் நீதிபதி மதன் லோகூர். அவர் கூறியதாவது:
ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், பவானிசிங் ஆஜரானது, நீதி பரிபாலன முறையின் தோல்வியை காண்பிக்கிறது. பவானிசிங் ஆஜரானதால், மேல்முறையீட்டு விசாரணை முழுவதுமே, சிதைக்கப்பட்டுவிட்டது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால், நீதி பரிபாலன நடைமுறையை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை, இந்த வழக்கு காண்பிக்கிறது.
வழக்கு விசாரணையே, 15 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது என்பதை வைத்து பார்க்கும்போதே, அதிகாரத்தில் உள்ளவர்களின் கைப்பாவையாக, துரதிருஷ்டவசமாக, நீதிபரிபாலன நடைமுறை மாறியது என்பது தெளிவாகிறது.
இந்த தவறை திருத்திக்கொள்ள இப்போதுதான் நேரம் கூடியுள்ளது. ஏனெனில், இந்த வழக்கே அதற்கு ஒரு சரியான உதாரணம். இந்த வழக்கில், மொத்த இழப்புமே, நீதிபரிபாலன நடைமுறைக்குதான். இவ்வாறு லோகூர் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.
ஆனால், நீதிபதி பானுமதியோ, கீழ்மை நீதிமன்றத்தில் ஆஜராக கர்நாடக அரசு கொடுத்த அனுமதி ரத்து செய்யப்படாததை காரணமாக கூறி, பவானிசிங் ஆஜரானது செல்லும் என்று கூறியுள்ளார். மூன்று நீதிபதிகள் பென்ச் எடுக்கும் முடிவு, வருங்காலத்தில் பல வழக்குகளுக்கு முன்னுதாரணமாக மாறும் என்பதால், இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications