ஜெ. மேல்முறையீடு விசாரணையில் பவானிசிங் ஆஜராக முடியுமா? முடியாதா?: நாளை தீர்ப்பு
பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராக முடியுமா, முடியாதா என்பது குறித்த தீர்ப்பு நாளை வெளியாகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சக குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடந்துவருகிறது.

சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராகிவருகிறார். அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டுகிறது திமுகவின் அன்பழகன் தரப்பு. மேலும், பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசுக்கு பதிலாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அளித்துள்ளது செல்லாது என்பதும் அன்பழகன் தரப்பு வாதம். எனவே பவானிசிங்கை இவ்வழக்கில் இருந்து நீக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.
நீதிபதிகள் குமார், வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. ஜெயலலிதா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பவானிசிங் ஆஜராவது சட்டவிரோதம் என க. அன்பழகன் தரப்பு வாதம் செய்தது. அன்பழகன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வி.நாகேஷ் வாதிட்டார். விசாரணை நீதிமன்றத்தில் மட்டுமே பவானி ஆஜராக கர்நாடக அரசு அனுமதித்திருந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. வழக்கில் அரசு தரப்பில் பவானி ஆஜராக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நாகேஷ் வாதத்தை முன்வைத்தார்.
பவானிசிங் தரப்பு வழக்கறிஞரோ, இதில் வாதிட பவானிசிங்கிற்கு அனுமதி உள்ளதாக கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இதுதொடர்பான தீர்ப்பை புதன்கிழமை (நாளை) வழங்குவதாக அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications