பீகாரில் பாஜக துணை தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை !
பாட்னா: பாட்னா: பீகார் மாநிலம் போஜ்புர் பகுதியில் பாஜக மாநில துணைத் தலைவராக இருக்கும் விஸ்வேஸ்வர் ஓஜாவை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநில பா.ஜ.க. துணைத் தலைவராக இருந்தவர் விஸ்வேஸ்வர் ஓஜா (வயது 45) . கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர் போஜ்பூர் மாவட்டம், பர்சவுரா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 12-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் விஸ்வேஸ்வர் ஒஜா காரை வழிமறித்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத்தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் விஸ்வேஸ்வர் ஓஜா மற்றும் கார் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டு பாய்ந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஸ்வேஸ்வர் ஓஜா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு லோக் ஜனசக்தி கட்சியின் வைசாலி மாவட்ட தலைவர் பிரிஜ்நாத் சிங் கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இன்று காலையில் சப்ராவில் பாஜக தலைவர் கேதர்நாத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் கூறுகையில், இது ஒரு 'அரசியல் படுகொலை. பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியல் கொலைகள் அதிகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கூறிய லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இந்த சம்பவத்துக்கு முதல்வர் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
