குடுமிப்பிடி சண்டை.. பாஜக எம்பியையே அலறவிட்ட ஜடேஜாவின் மனைவி! மேயருடன் கடும் மோதல்.. வீடியோ
காந்திநகர்: இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியும், பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜா கட்சியினர் பாஜக எம்பியை அலறவிட்டதும், சமாதானம் செய்ய சென்ற மாநாகராட்சி மேயரை கடுமையாக விமர்சித்து சண்டையிட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருபவர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார். இதனால் ரவீந்திர ஜடேஜாவுக்கு தமிழகத்தில் பட்டித்தொட்டி எங்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் ரிவாபா ஜடேஜா. இவர் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் போர் நினைவு சின்னம் ஜாம் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது. இதன் திறப்பு விழா நடந்த நிலையில் நிகழ்ச்சியில் ஜாம் நகர் பாஜக எம்பி பூனம் மாடம், பாஜக எம்எல்ஏவான ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, மாநகராட்சி மேயர் பினா கோத்தாரி உள்பட பலர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த வேளையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்போது ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட்டு சென்றார். இந்த வேளையில் எம்பி பூனம் மாடம், நெகட்டிவ்வாக கமெண்ட் செய்துள்ளார். அதாவது ரிவாபா ஜடேஜா நிகழ்ச்சிக்காவும் தன்னை பற்றிய மதிப்பு அதிகரிப்பதற்காகவும் தான் செருப்பை கழட்டியுள்ளார் தெரிவித்தார்.
ஏற்கனவே ரிவாபா ஜடேஜா, எம்பி பூனம் மாடம் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் இதை கேட்ட ரிவாபா ஜடேஜா கடும் கோபமடைந்தார். இதையடுத்து அவர் எம்பி பூனம் மாடத்தை விமர்சனம் செய்தார். சுற்றிலும் அதிகமானவர்கள் நின்றதால் எம்பி பூனம் மாடம் செய்வதறியாது திகைத்து நின்றார். இந்த வேளையில் மேயர் பினா கோத்தாரி, ரிவாபாவை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது கடும் கோபமடைந்த அவர், ‛‛உங்களின் எல்லைக்குள் நிற்க வேண்டும். அதோடு உங்களின் வேலையை மட்டும் பாருங்கள்'' என குஜராத்தி மொழியில் கூறினார்.

இந்த வேளையில் எம்பி பூனம் மாடம் குறுக்கிடவே, ‛‛இந்த பிரச்சனைக்கு நீங்கள் தான் காரணம். நெருப்பை பற்றவைத்துவிட்டு இப்போது அணைக்க முயற்சிக்கிறீர்களா?'' என சாடினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் அவர்கள் 3 பேர் இடையேயான மோதல் தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவிடம் கேட்டபோது, ‛‛நான் பேச வேண்டியிருந்தது. ஏனென்றால் அது எனது சுய மரியாதையை இழுக்கும் செய்யும் வகையில் இருந்தது. அதோடு உண்மையில் நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் இராணுவ வீரர்களுக்கு மட்டுமே அதிக மரியாதை செலுத்துகிறேன் என்று அவளிடம் சொன்னார். இதனால் கோபமடைந்தேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications