பாஜகவும், ஆர் எஸ் எஸ் அமைப்பும் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றன : ப சிதம்பரம் தாக்கு
பாஜகவும், ஆர் எஸ் எஸ் அமைப்பும் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றன என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மங்களூர் : பாஜகவும், ஆர் எஸ் எஸ் அமைப்பும் சர்வாதிகார ஆட்சியை நாட்டில் நடத்திவருகின்றன. கர்நாடகாவின் வழியாக பாஜக தென்னிந்தியாவில் காலூன்றினால் அது பன்முகத்தன்மைக்கு ஆபத்தாகி விடும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் வருகிற 12ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் மங்களூரில் பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில், நாடு முழுவதும் ஒரே மொழி, ஒரே வரலாறு, ஒரே வாழ்க்கை என்கிற சித்தாந்தத்தை திணிக்க பாஜக அரசு முயற்சித்து வருவது இந்திய கலாசாரத்திற்கும், பன்முகத்தன்மைக்கும் மிகவும் ஆபத்தானது.
பாஜகவும், ஆர் எஸ் எஸ் அமைப்பும் சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கின்றன. இவர்களால்தான் கர்நாடகாவின் வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சித்தராமையாவை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.
கர்நாடகா வழியாக தென்னிந்தியாவில் காலூன்ற பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மக்கள் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், தென்னிந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து ஏற்படும்.
பிரதமர் மோடி தனது பதவிக்குரிய கண்ணியம் இல்லாமல் பேசி வருகிறார். இந்திய ராணுவம் குறித்து தவறான கருத்துகளை அவர் பிரசாரத்தில் சொல்வது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வராவிட்டால் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். நாட்டின் பொருளாதார மந்த நிலையை உடனடியாக சீர் செய்ய பாஜக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
