மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: முறிந்தே போனது 25 ஆண்டுகால பாஜக- சிவசேனா கூட்டணி!!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்தது போலவே 25 ஆண்டுகால பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ளது. அதிக தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் பதவியைக் கைப்பற்ற பாஜகவும் சிவசேனாவும் துடித்ததாலே இரு கட்சிகளுடனான கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.,
288 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள்.
மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் சிவசேனா - பா.ஜனதா கட்சிகள் இந்த சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்தன.

சரிபாதி தொகுதிகள்...
முதலில் பாரதிய ஜனதா கட்சி சரிபாதியான 144 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் சிவசேனாவோ, மகாராஷ்டிராவில் நாங்களே பெரிய கட்சி, அதனால் இது சாத்தியமே என்று எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டது.

தலா 135 தொகுதிகள்..
பின்னர் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடுவது; எஞ்சிய 18 தொகுதிகளைக் கொடுப்பது என்ற பார்முலாவை பாஜக முன்வைத்தது. ஆனால் இதை சிவசேனா ஏற்கவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தது.

இறங்கி வந்த பாஜக.
இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை நின்று போனது. பின்னர் பாஜக 130 தொகுதிகளில் போட்டியிட இறங்கி வந்தது. சிவசேனாவோ 151 தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருந்தது.

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி
இதனால் 3 கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள்தான் ஒதுக்கும் நிலை உருவானது. இதற்கு கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சிவசேனா பார்முலா
சிறிய கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் விதமாக சிவசேனா 151, பா.ஜனதா- 127, சிறிய கட்சிகள்-10 தொகுதிகள் போட்டியிடலாம் என்று சிவசேனா புதிய தொகுதிப் பங்கீட்டை முன்வைத்தது.

வெளிநடப்பு செய்த பாஜக
ஆனால் இதனை பாஜக திட்டவட்டமாக நிராகரித்தது. பின்னர் சிவசேனா- பாஜக தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் வினோத் தாவ்டே ஆகியோர் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணி முறிவது உறுதியானது.

சிவசேனா சமாதான முயற்சி
இந்தநிலையில் சிவேசனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் திவாகர் ராவ்தே, அனில் தேசாய் எம்.பி. ஆகியோரை பா.ஜனதா தலைவர்களை சந்திக்க அனுப்பி வைத்தார். ஆனாலும் கடைசி வரை உடன்பாடு எட்டவில்லை.

கூட்டணி முறிந்தது-பாஜக
இதனால் 25 ஆண்டு கால சிவசேனா - பா.ஜ.க., கூட்டணி எதிர்பார்த்தது போலவே உடைந்தது. இதுபற்றி பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டணி விவகாரத்தில் சிவசேனா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் அந்த கட்சியுடன் கூட்டணியை முறித்து கொள்ள நாங்கள் முடிவு செய்து விட்டோம். இது தொடர்பாக சிவசேனாவுக்கு தகவல் அனுப்பி விட்டோம்.

சிவசேனாவை எதிர்க்கவில்லை
கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்து உள்ளோம். 25 ஆண்டு கூட்டணி முறிந்தாலும், சிவசேனாவுடன் நட்பு தொடர்ந்து நீடிக்கும். தேர்தல் பிரசாரத்தின் போது சிவசேனாவை விமர்சிக்க மாட்டோம். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசை அகற்றுவதே எங்களது இலக்கு. ஏற்கனவே கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

முதல்வர் பதவி மோகம்
சிவசேனாவைப் பொறுத்தவரையில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு எப்படியும் முதல்வர் பதவியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தது. இதனால் தாம் போட்டியிடும் தொகுதிகளை விட்டுக் கொடுக்கவில்லை. பாஜகவும் சிவசேனாவுக்கு சமமாக போட்டியிட விரும்பினாலும் துணை முதல்வர் பதவி மற்றும் முக்கிய துறைகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக 130 தொகுதிகளில் இருந்து இறங்கி வரவில்லை. இப்படி இரு கட்சிகளும் பதவி மோகத்தில் பிடிவாதம் காட்ட கால் நூற்றாண்டுகால கூட்டணி 'காலாவதி' ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications