பாஜக கூட்டணிக்கு 227; காங்கிரஸ் கூட்டணிக்கு 101; பிற கட்சிகளுக்கு 215 இடங்கள்: கருத்துக் கணிப்பு
டெல்லி: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி இதுவரை பெறாத அளவுக்கு மிகக் குறைந்த இடங்களிலேயே வெல்லும் என்றும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் தேசிய ஜனநாயக்க கூட்டணிக்கே அதிகம் உள்ளதாகவும், இருந்தாலும் அந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நவ் மற்றும் சிவோட்டர் இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.

202 சீட்டுகள் கிடைக்குமாம்
இன்று தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் பாஜகவுக்கு 202 இடங்கள் கிடைக்குமாம். அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 25 இடங்கள் கிடைக்குமாம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 227 இடங்கள்
எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 227 இடங்கள் வரை கிடைக்குமாம். மொத்த எம்.பிக்கள் எண்ணிக்கை 543 ஆகும்.

காங்கிரஸுக்கு 89 தானாம்
காங்கிரஸ் கட்சிக்கு 89 இடங்களே கிடைக்குமாம். அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெறும் 12 இடங்கள்தான் கிடைக்குமாம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 101
மொத்தத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 101 இடங்கள் கிடைக்குமாம்.

மற்றவர்களுக்கு 42%
அதேசமயம், மற்றவர்களுக்கு மொத்தமாக 42 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஆம் ஆத்மிக்கு 7 சீட்
நாடு முழுவதும் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இத்தேர்தலில் 7 இடங்களில் வெற்றி கிடைக்குமாம்.

4 இடங்கள் டெல்லிக்கு வெளியே
இதில் 3 இடங்களை அது டெல்லியில் வெல்லுமாம். மீதமுள்ள 4 இடங்களை அது ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெல்லுமாம்.

8 சதவீத வாக்குகள்
ஆம் ஆத்மி கட்சிக்கு லோக்சபா தேர்தலில் 8 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். பாஜக, காங்கிரஸைத் தவிர்த்துப் பார்த்தால் தனி ஒரு கட்சியாக இக்கட்சியே அதிக அளவிலான வாக்கு சதவீதத்தைப் பெறும் என்கிறது இக்கருத்துக் கணிப்பு.

அதிமுகவுக்கு 27 சீட் கிடைக்குமாம்
அதிமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 27 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு.

இடதுசாரிகளுக்கும் 27 சீட்தான்
அதேபோல இடதுசாரி கூட்டணிக்கும் 27 இடங்களில் வெற்றி கிடைக்குமாம்.

திரினமூல் காங்கிரஸுக்கு 24
மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸுக்கு வரும் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி கிடைக்குமாம்.

மாயாவதி கட்சிக்கு 21 - சமாஜ்வாடிக்கு 20
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 இடங்களும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 20 இடங்களிலும் வெற்றி கிடைக்கலாமாம்.

2009ல் காங்கிரஸுக்கு 206
கடந்த 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 206 இடங்களில் வென்றது என்பது நினைவிருக்கலாம்.

ஆந்திராவில் பலத்த அடி கிடைக்கும்
ஆந்திராவி்தான் காங்கிரஸுக்கு இந்த முறை பலத்த அடி கிடைக்கப் போகிறதாம். அதாவது மொத்தமே 6 இடங்களில்தான் அங்கு அது வெல்லுமாம். கடந்த தேர்தலில் இங்குதான் காங்கிரஸுக்கு அதிக அளவிலான இடங்கள் கிடைத்தன. அதாவது 33 எம்.பிக்களை ஆந்திரா காங்கிரஸுக்கு வாரி வழங்கியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

ஜெகன் மோகன் ரெட்டியால் பேரிழப்பு
கடந்த தேர்தலில் காங்கிரஸின் பெரும் வெற்றிக்குக் காரணமானவர் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. இப்போது காங்கிரஸுக்குப் பேரழிவை ஏற்படுத்தப் போவது அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பியிலும் செம அடி
உ.பி.யிலும் காங்கிரஸுக்கு இந்த முறை பெரும் அடி கிடைக்கப் போகிறதாம். அங்கு 4 தொகுதிகளில் மட்டுமே அது வெல்லுமாம். கடந்த முறை 21 இடங்களை அது வென்றிருந்தது.

ராஜஸ்தானில் 4 தான்
ராஜஸ்தானிலும் காங்கிரஸுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்குமாம். கடந்த முறை இங்கு அது 20 இடங்களைப் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

கர்நாடகத்தில் அதிகரிக்கிறது
கர்நாடகத்தில் கடந்த தேர்தலில் 6 இடங்களையே வென்றிருந்தது காங்கிரஸ். இந்த முறை அங்கு 14 இடங்களில் வெல்லுமாம். சட்டிஸ்கரில் கடந்த முறை ஒரு வெற்றியே கிடைத்திருந்தது. இந்த முறை 3 இடங்களை அது பிடிக்கும். ஒரிசாவில் கடந்த முறை 6 வென்ற நிலையில் இந்த முறை 7 இடங்களைப் பிடிக்குமாம்.

உ.பியில் பாஜகவுக்கு பெரும் வெற்றி
மறுபக்கம் பாஜகவுக்கு உ.பியில்தான் பெரும் வெற்றி கிடைக்குமாம். அதாவது 34 இடங்களை அது கைப்பற்றுமாம். கடந்த முறை அங்கு 10 தொகுதிகளில்தான் அது வென்றிருந்தது.

ராஜஸ்தானில் நல்ல அறுவடை
அதேபோல ராஜஸ்தானில் கடந்த முறை வெறும் நான்கு இடங்களிலேயே வென்ற பாஜக இந்த முறை 21 இடங்களை வெல்லப் போகிறதாம்.

பீகாரில் 21
பீகாரில் கடந்த முறை பாஜகவுக்கு 12 இடங்களே கிடைத்தன. இந்த முறை அப்படியே மாறி 21 இடங்களைக் கைப்பற்றுமாம்.

லாபம் காணும் அதிமுக, ஜெகன் மோகன் ரெட்டி, டி.ஆர்.எஸ்
கடந்த தேர்தலை விட வரும் தேர்தலில் அதிமுக, ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்குத்தான் நல்ல லாபம் கிடைக்குமாம். அதிமுகவுக்கு கடந்த முறை 9 இடங்களே கிடைத்திருந்தன. இந்த முறை அது 27 ஆகிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் புதுக் கட்சி எடுத்த எடுப்பிலேயே 13 இடங்களை வாருகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2 இடத்திலிருந்து 10 இடத்திற்குத் தாவுகிறது.

லாலு கட்சிக்கும் லாபம்தான்
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கடந்த முறை 4 இடங்களில்தான் வென்றிருந்தது. இந்த முறை அக்கட்சிக்கு 12 பேர் கிடைக்கப் போகிறார்கள்.

ஐக்கிய ஜனதாதளத்திற்கு அடி
ஐக்கிய ஜனதாதளம்தான் இந்தத் தேர்தலில் பெரும் அடி வாங்கப் போகிறது. கடந்த முறை அது 20 இடங்களில் வென்றிருந்தது. இந்த முறை அதற்கு வெறும் 5 சீட்டுகளே கிடைக்குமாம்.

பவார் கட்சிக்கும் அடி
அதேபோல சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் 9 இடங்களில் வெற்றி கிடைத்தது. இந்த முறை 5 இடங்களே கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications