ஓடும் ரயிலில் 9 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு... பயணிகளின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு
டெல்லி: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் இருந்து டெல்லி செல்லும், கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரிலிருந்து நேற்று பிற்பகல் டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையம் நோக்கி கிளம்பியது கோண்ட்வானா எக்பிரஸ் ரயில். சிகோரா ரோடு ரயில் நிலையம் அருகே அந்த ரயில் சென்றபோது, பயணிகளில் சிலர், மர்ம பை ஒன்று எஸ்-8 பெட்டியில் இருப்பதை பார்த்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் அளித்த தகவலின்பேரில் போலீசார் வந்து பையை சோதனை செய்தபோது, உள்ளே வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. பேட்டரிகள், வயர்களுடன் சுற்றப்பட்ட நிலையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய பிரதேச போலீசாரின், உடனடி செயல்பாட்டு பிரிவை சேர்ந்த போலீசார், உடனடியாக குண்டுகளை நதியோரம் கொண்டு சென்று செயலிழக்கச் செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குண்டு வைத்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தக்க நேரத்தில் பயணிகள் கொடுத்த தகவலால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது
இதனிடையே அந்த ரயில் மாலிகேதி ரயில் நிலையம் அருகே சென்றபோது, எஸ்-7 கோச்சிலும், வெடிகுண்டி இருப்பதாக வதந்தி கிளம்பியது. இதையடுத்து ரயிலை நிறுத்திவைத்த போலீசார், ரயில் முழுவதிலும் சுமார் இரண்டு மணி நேரம் தீவிர சோதனையை நடத்தினர். ஆனால் அதன்பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications