பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போட! உயிரை பணயம் வைத்த நர்ஸ் கமலா தேவி! புல்லரிக்கும் வீடியோ
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனது உயிரையும் பணயம் வைத்து கதி கலங்க வைக்கும் ஆற்றுநீரை தாண்டி செல்லும் சுகாதார பணியாளரின் வீடியோ பார்ப்பதற்கு பதைபதைக்க வைத்தாலும் அவருடைய கடமையை எண்ணும் போது அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இமாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அங்கு கனமழை கொட்டி தீர்ப்பதால் ஏராளமான நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது.

அதிலும் மண்டி என்ற மாவட்டம் கடுமையாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்டி மாவட்ட சுகாதார பணியாளர் கமலா தேவி (40) என்பவர், ஒரு பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனது உயிரை பணயம் வைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
மண்டி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்திற்குள்பட்ட கிராமத்தினர் மாவட்ட தலைநகரில் உள்ள மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கும் மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
அந்த வகையில் மண்டி மாவட்டத்திற்குள்பட்ட ஒரு கிராமத்தில் ஒரு பெண் அண்மையில் குழந்தை பெற்றெடுத்தார். அவரது குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டியிருந்தது. ஆனால் மாவட்டந்தோறும் கனமழை பெய்து வருவதால் பச்சிளம் குழந்தையை தூக்கிக் கொண்டு மாவட்ட சுகாதார மையத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதை அறிந்த கமலா தேவி, நீங்கள் வரவேண்டாம், நானே உங்கள் இடத்திற்கு வந்து குழந்தைக்கு தடுப்பூசி போட்டுச் செல்கிறேன் என கூறியிருந்தாராம். இதையடுத்து கமலா தேவி, குழந்தைக்கு தேவையான தடுப்பூசியை ஒரு பதப்படுத்தும் பெட்டியில் வைத்துக் கொண்டு தோளில் மாட்டிக் கொண்டார்.
பின்னர் ஆர்ப்பரிக்கும் ஆற்றில் ஒரு பாறையில் நின்றுக் கொண்டு செருப்பை கழற்றி ஒரு கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து அருகில் இருக்கும் பாறைக்கு குதித்து, அங்கிருந்து இன்னொரு பாறை என ஆபத்தான முறையில் அந்த நீர் நிலையை கடக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கமலா தேவி கூறுகையில், "குழந்தையை நினைத்து எனக்கு கவலையாக இருந்தது. குறித்த நேரத்தில் தடுப்பூசி போடாவிட்டால் தொற்று பாதிப்பு ஏற்படும். அவரது தாயால் மருத்துவமனைக்கு வரமுடியாத நிலையில் வானிலை இருக்கிறது.
இதனால் நான் அவர்களை தேடிச் செல்ல நினைத்தேன். எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மகன் 11 ஆம் வகுப்பிலும் மகள் 9ஆம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள். என கணவர் பட்டதாரி பயிற்சி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்த வீடியோவை யார் எடுத்தார்கள் என தெரியவில்லை. எனக்கு நிறைய பேர் போன் செய்து பாராட்டி வருகிறார்கள்" என கமலா தேவி தெரிவித்தார்.
எந்த பணியாக இருந்தாலும் அலட்சியத்துடன் இருக்கும் அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கூட ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்ற கமலா தேவி பாராட்டுதலுக்குரியவரே!












Click it and Unblock the Notifications